கர்நாடக தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள பாஜக அம்மாநிலத்தில் ஆட்சியை இழந்துள்ளது. இதன் மூலம் தென் மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு கேள்விக்குறியாகி உள்ளத
கர்நாடக தேர்தல் முடிவுகள் தான் இன்றைய ஹாட் டாபிக். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 132 இடங்களிலும், பாஜக 66 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 22 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது உறுதியாகி உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை, தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்புள்ளதாகவும், காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவக்கூடும் என்றும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கர்நாடக தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
வடமாநிலங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ள பாஜக, தென் மாநிலங்களில் கர்நாடகவில் மட்டுமே ஆட்சியில் இருந்தது. மாநில கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் தென் மாநிலங்களில் பாஜகவின் வளர்ச்சி என்பது மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக – அதிமுக என்ற திராவிட கட்சிகளே மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. கேரளாவில் கம்யூனிஸ்ட் – காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் உள்ளன. அதே போல் ஆந்திராவில் ஒய்.எஸ்,ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகளே அதிக்கம் செலுத்துகின்றன. தெலங்கானாவிலும் டி.ஆர்.எஸ் தான் ஆட்சியில் இருக்கிறது.
இதையு படிங்க : Karnataka Assembly Election 2023: தெளிவான தீர்ப்பு கொடுத்த கர்நாடக மக்கள்; பாஜக எங்கே சறுக்கியது?
இந்த கர்நாடகாவில் மட்டுமே ஆனால் இந்த தேர்தலின் மூலம் கர்நாடகாவிலும் பாஜக ஆட்சியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 2018 தேர்தலில், பாஜக 104 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, அதைத் தொடர்ந்து காங்கிரஸ் 80 இடங்களையும், JD(S) 37 இடங்களையும் பெற்றுள்ளது. அந்த நேரத்தில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் மற்றும் JD(S) கூட்டணி அமைக்க முயன்று, தனிப்பெரும் கட்சியாக இருந்த பாஜகவின் பிஎஸ் எடியூரப்பா உரிமை கொண்டாடி ஆட்சி அமைத்தார்.
இருப்பினும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக, மூன்று நாட்களுக்குள் அந்த ஆட்சி கலைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைத்தது. குமாரசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் ஆளும் கூட்டணியை சேர்ந்த 15 சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென ராஜினாமா செய்ததால் இந்த கூட்டணி ஆட்சி 14 மாதங்களில் கவிழ்ந்தது.
இதை தொடர்ந்து 2019ல் 15 தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக 12 இடங்களை கைப்பற்றியது. அதன்படி தற்போது கர்நாடக சட்டசபையில், ஆளும் பாஜகவுக்கு 116 எம்எல்ஏக்களும், அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு 69 மற்றும் ஜேடிஎஸ் 29 எம்எல்ஏக்களும் உள்ளனர்.
இந்த சூழலில் சமீபத்தில் நடந்த கர்நாடக தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தன. பாஜகவுக்காக பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே பி நட்டா உள்ளிட்டோர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டனர். அதே போல் காங்கிரஸ் கட்சிக்காக ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.
எனினும் முஸ்லீம் இடஒதுக்கீட்டை ரத்து செய்தது, நந்தினி பால் சர்ச்சை, வேலைவாய்ப்பின்மை, ஊழல், ஹிஜாப் விவகாரம், மத ரீதியான வெறுப்பு பிரச்சாரம் உள்ளிட்ட பல காரணிகள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே கர்நாடகாவில் பாஜக ஆட்சியை இழக்க உள்ளது. இதன் மூலம் தென் மாநிலங்களில் தான் ஆட்சியில் இருந்த ஒரே மாநிலத்திலும் பாஜக ஆட்சியை இழந்துள்ளது. எனவே மீண்டும் தனது ஆபரேஷன் லோட்டஸ் ஃபார்முலாவை அக்கட்சி தீவிரமாக கையில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : கர்நாடகாவில் வெற்றி பெற்றதா ஜெய் பஜ்ரங் தளம்? பாஜகவை மடக்குவதற்கு ஆம் ஆத்மி வழியில் சென்ற காங்கிரஸ்!!