Karnataka Assembly Election 2023: தெளிவான தீர்ப்பு கொடுத்த கர்நாடக மக்கள்; பாஜக எங்கே சறுக்கியது?

By SG Balan  |  First Published May 13, 2023, 1:19 PM IST

கருத்துக்கணிப்புகள் பல தொங்கு சட்டப்பேரவை ஏற்படும் என்று கூறியிருந்த நிலையில், அவற்றைப் பொய்யாக்கிய கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தெளிவான தீர்ப்பைக் கொடுத்துள்ளனர்.


நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. கருத்துக்கணிப்புகள் பல தொங்கு சட்டப்பேரவை ஏற்படும் என்று கூறியிருந்த நிலையில், அவற்றைப் பொய்யாக்கிய கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தெளிவான தீர்ப்பைக் கொடுத்துள்ளனர்.

பாஜகவுக்கு நந்தினி பால் விவகாரம், முஸ்லிம் இடஒதுக்கீடு பிரச்சனை, ஹிஜாப் விவகாரம், ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவை பின்னடைவை அளித்திருப்பதாகக் கருதப்படுகிறது.

Latest Videos

நந்தினி பால் விவகாரம்:

தமிழ்நாட்டில் ஆவின் போல கர்நாடகாவில் உள்ள பால் மற்றும் பால் பொருட்களுக்கான கூட்டுறவு நிறுவனம்தான் நந்தினி. நந்தினிக்கு பால் நிறுவனத்துக்குப் போட்டியாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அமுல் நிறுவனமும் கர்நாடகாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டது எதிர்ப்பைக் கிளப்பியது. அதுகுறித்த அறிவிப்பு வெளியானதும் காங்கிரஸ் இதற்கு வன்மையான கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் இறங்கியது. பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் அமுல் நிறுவனத்தை கர்நாடகாவிலும் நுழைத்து நந்தனி நிறுவனத்தை அழிக்க முயல்கிறார்கள் என்று காங்கிரஸ் சாடியது. இதனால், #SaveNandini, #BoycottAmul, #GoBackAmul ஆகிய ஹேஷ்டேகுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

முஸ்லிம் இடஒதுக்கீடு:

பாஜக அரசு இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்ட 4 சதவீதம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, அதனை வொக்கலிகா, லிங்காயத்து சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை தலா 2 சதவீதம் உயர்த்தியது. இதற்கு கர்நாடக மாநிலத்தில பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர், இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்த பாஜக அரசின் உத்தரவுக்குத் தடை விதித்துவிட்டது. ஆனால், பாஜக தொடர்ந்து மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லை என்று கூறி முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்தது. இதனை பயன்படுத்திக்கொண்டு, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு மீண்டும் கொண்டுவரப்பட்டும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவித்தது.

ஹிஜாப் பிரச்சினை:

கர்நாடகாவில் கடந்த பாஜக ஆட்சியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதைக் கண்டித்து, சில மாணவர்கள் காவித் துண்டுகளுடன் போராட்டத்தில் ஏடுபட்டனர். சர்ச்சையை ஏற்படுத்திய இச்சம்பவத்துக்குப் பின்பு, கல்வி நிலையங்களில் இஸ்லாமியப் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர பாஜக அரசு தடை விதிக்கப்பட்டது. இந்த ஹிஜாப் தடைக்கு எதிராக வழக்கில் உயர்நீதிமன்றம் பாஜக அரசின் தடையை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதனையடுத்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த ஹிஜாப் தடை பிரச்சினையும் கர்நாடகாவில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் பாஜக மீது எதிர்மறையான மனநிலையை ஏற்படுத்தியது.

ஊழல் குற்றச்சாட்டுகள்:

பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டது நாடு முழுதவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த அறிக்கையில், அரசு ஒப்பந்தங்களுக்கு 40% கமிஷன் பெற்றதால் பல உயிர்கள் பறிபோய்விட்டன எனவும் மக்கள் உயிருக்கு ஆபத்தான கட்டமைப்புகளுடன் வாழவேண்டிய நிலையில் உள்ளனர் எனவும் கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏ விருபாக்‌ஷப்பா லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டார். அவரது மகன் வீட்டில் கணக்கில் வராத சுமார் 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

வெறுப்பு பிரச்சாரம்:

தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை பாஜக தனக்குச் சாதகமாக பயன்படுத்தியது. காங்கிரஸ் பாஜக அனுமன் பக்தர்களை அனுமதித்துவிட்டதாக கூறியந பிரதமர் மோடி, ஜெய் பஜ்ரங்கி என்று கூறிக்கொண்டே வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டார். உள்துறை அமைச்சர் அமித் ஷா காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவில் கலவரம் வெடிக்கும் என்று பேசினார். முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்கத் தேவையில்லை எனத் தெரிவித்தார்.

மூத்த தலைவர்கள் புறக்கணிப்பு:

பாஜகவில் பல ஆண்டுகளாக முக்கிய அங்கம் வகித்த தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக வாய்ப்பு மறுக்கப்பட்ட மூத்த தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண் சுவடி ஆகியோர் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டது பாஜவுக்கு பலவீனமாக அமைந்தது. தேர்தலில் சீட் கிடைக்காத அதிருப்தியில் ஜனார்த்தன ரெட்டி தனிக்கட்சி தொடங்கி போட்டியிட்டிருக்கிறார். இவ்வாறு செல்வாக்கு மிகுந்த மூத்த தலைவர்கள் விலகியது பாஜகவின் வாக்கு வங்கியைப் பாதித்துள்ளது.

click me!