
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய கூடாது என விதிக்கப்பட்ட தடையை குஜராத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் வாபஸ் பெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகம் ஆகியவற்றை சந்தையில் விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு கடந்த மே 23-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக விலங்குகள் வதைச்சட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் திருத்தம் கொண்டு வந்தது.
இந்த உத்தரவால் நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. விவசாயிகள் தங்களின் வயதான கால்நடைகளை விற்பனைசெய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
இந்த உத்தரவை காரணம் காட்டி மாடுகளை பண்ணை உரிமையாளர்கள் வண்டியில் ஏற்றினாலே அவர்கள் மீது பசுகுண்டர்கள் தாக்குதல் நடத்தி கொலை செய்யும் சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் அறங்கேறின.
மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநில அரசுகள் நடைமுறை படுத்தவில்லை. அங்கு மக்கள் போராட்டங்களையும், சாலையில் மாட்டிறைச்சி சமைத்தும் சாப்பிட்டும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நாடுமுழுவதும் உருவான எதிர்ப்பையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்சவர்தன், “இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யும் தடையை விரைவில் நீக்குவோம்’’ என அறிவித்தார்.
மேலும், இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யத் தடை உத்தரவு குறித்து அனைத்து மாநில அரசுகளும் தங்களின் கருத்துக்களை மத்திய அரசுக்கு அறிக்கையாக அளிக்க மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
இதற்கிடையே கடந்த மே மாதம் மதுரை உயர் நீதிமன்ற கிளையும், ஜூலை மாதம், உச்ச நீதிமன்றமும் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தன.
இந்நிலையில், இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யும் தடை அறிக்கையை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.
இதனிடையே உ.பியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. அதனால் பாஜக பெரும் குஷியில் உள்ளது. இதையொட்டி குஜராத் தேர்தல் வேலைபாடுகளும் மிக மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
அதிலும் எப்படியாவது இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதில் பாஜக மிகவும் கூர்மையாக கவனித்து வருகின்றது. அதில் பெரும்பாலும் எதிர்ப்புகள் கிளப்பிய மாட்டிறைச்சி விவகாரம் தேர்தல் வெற்றிக்கு ஒரு முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு மோடி தலைமையிலான பாஜக அரசு மிகவும் சிறப்பாக காய் நகர்த்தி வருகின்றது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்...!