இறைச்சிக்காக மாடு விற்பனை தடை விரைவில் வாபஸ் -  பணிந்தது மத்திய அரசு

Asianet News Tamil  
Published : Nov 30, 2017, 08:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
இறைச்சிக்காக மாடு விற்பனை தடை விரைவில் வாபஸ் -  பணிந்தது மத்திய அரசு

சுருக்கம்

The Central Government has decided to withdraw the ban imposed on cattle for meat

இறைச்சிக்காக மாடுகளை, ஒட்டங்களை சந்தையில் விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடைக்கு, நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த உத்தரவை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகம் ஆகியவற்றை சந்தையில் விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு கடந்த மே 23-ந்தேதி அறிவிக்கை வெளியிட்டது. இதற்காக விலங்குகள் வதைச்சட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் திருத்தம் கொண்டு வந்தது.

இந்த உத்தரவால் நாடுமுழுவதும் இறைச்சி விற்பனை செய்யும் சிறு கடை நடத்துபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விவசாயிகள் தங்களின் வயதான கால்நடைகளை விற்பனைசெய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து,  மாடுகளை மருத்துவசிகிச்சைக்கும், விற்பனைக்கும் கூட கொண்டு செல்லும் பண்ணை உரிமையாளர்கள் மீது கூட பசுகுண்டர்கள் தாக்குதல் நடத்தி கொலை செய்யும் சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில்  நடந்தன. சட்டத்தை கையில் கையில் எடுத்து பசு குண்டர்கள் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் குறிப்பாக பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் அதிகரித்தன.

மத்திய அரசின் உத்தரவுக்கு கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநில அரசுகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. அங்கு மக்கள் போராட்டங்களையும், சாலையில் மாட்டிறைச்சி சமைத்தும் சாப்பிட்டும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

நாடுமுழுவதும் உருவான எதிர்ப்பையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்சவர்தன், “இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யும் தடையை விரைவில் நீக்குவோம்’’ என அறிவித்தார். 

மேலும், இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யத் தடை உத்தரவு குறித்து அனைத்து மாநில அரசுகளும் தங்களின் கருத்துக்களை மத்திய அரசுக்கு அறிக்கையாக அளிக்க மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

இதற்கிடையே கடந்த மே மாதம் மதுரை உயர் நீதிமன்ற கிளையும், ஜூலை மாதம், உச்ச நீதிமன்றமும் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தன.

இந்நிலையில், இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யும் தடை அறிவிக்கையை மத்திய அரசு வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு வாபஸ் பெற முடிவுசெய்துள்ளது. இது குறித்த கோப்புகளை சட்டத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி இருக்கிறோம், விரைவில் அறிவிப்பு வெளியாகும். ஆனால், எப்போது அறிவிக்கப்படும் என்பது தெரியாது’’ என்று தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

மரண தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டேன்.. உன்னாவ் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் சூளுரை!
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு வன்முறை நடப்பதாக பாகிஸ்தான் கதறல்.. வெளியுறவுத்துறை பதிலடி..!