
மத்திய அரசு சார்பில், நிதித்துறை செயலாளர் கையொப்பமிட்டு வெளிவந்த நீலநிற ஒரு ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டு நேற்றுடன் 100 ஆண்டு முடிந்தது.
சுதந்திரத்துக்கு முந்தய இந்திய அரசு முதன்முதலாக ரூபாய் நோட்டுகளை கடந்த 1861ம் ஆண்டு அச்சிட்டது. ஆனால், ஒரு ரூபாய் நோட்டு ஆங்கிலேயர் காலத்தில் 1917ம் ஆண்டு, நவம்பர் 30-ந்தேதி இங்கிலாந்தில் முதன்முதலில் அச்சிடப்பட்டது. அந்த ரூபாய் நோட்டின் இடது ஓரத்தில் மன்னர் 5-ம் ஜார்த் உருவம் அச்சிடப்பட்டு இருந்தது.
கடந்த 1970ம் ஆண்டுவரை இந்த ஒரு ரூபாய் ்நோட்டுகளை பெர்சியன், வளைகுடா நாடுகளான துபாய், பஹ்ரைன், மஸ்கட், ஓமனில் பயன்படுத்தப்பட்டது. இந்த ரூபாய் நோட்டுகளை பார்த்து அதன்பின் போர்ச்சுகல், பிரான்ஸ் நாடுகள் சுயமாக ஒருரூபாய் நோட்டுகளை அச்சடித்தன.
ஆனால், இந்த ரூபாய் நோட்டு அச்சடிப்படை கடந்த 1994ம் ஆண்டு மத்திய அரசு நிறுத்தியது. ஆனால், மக்களின் தேவையை கருத்தில் கொண்டு மீண்டும் 2015ம் ஆண்டுவரை அச்சடித்தது. மற்ற ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் வங்கி கவர்னர் கையொப்பம் இடும் நிலையில், இந்த ரூபாய் நோட்டுகள் மத்திய அரசால் அச்சடிக்கப்படுவதால், அதில் நிதித்துறை செயலாளர் கையொப்பம் இட்டு இருப்பார்.
வீட்டு விஷேசங்கள், திருமணங்கள், சுபநிகழ்ச்சிகளின் போது, 11, 51, 101, 501, 1001 ரூபாய்கள் என பரிசளிக்கவும், செய்முறை செய்யவும் இந்த ஒரு ரூபாய் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டு மக்கள் புழக்கத்துக்கு வந்து 100 ஆண்டுகள் நேற்றுடன் முடிந்துவிட்டது.ஆனால், மத்திய அரசு சார்பிலும், ரிசர்வ் வங்கி சார்பிலும் எந்தவிதமான கொண்டாட்டமும் இல்லை.
இது குறித்து ஓஸ்வால் ஏல நிறுவனத்தின் நிறுவனர் கிரிஷ் வீரா கூறுகையில், “ கடந்த 1917ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நோட்டு இன்னும் மாவட்ட ஆட்சியர்கள், கருவூலத்தில் இருக்கிறது. இப்போது இந்த ரூபாய் நோட்டின் புழக்கம் நிறுத்தப்பட்டபோதிலும், வங்கிகளிலும், அரசு அலுவலகங்களிலும் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் ஒரு ரூபாய் நோட்டில் 28 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முதலில் வெள்ளியில் ஒருரூபாய் அடிக்கப்பட்டது அதன்பின் அதன் செலவு அதிகமாக இருக்கிறது என்பதால், முதலாம் உலகப்போரின் போது அந்த காசுகளை உருக்கி, வெள்ளிக்கட்டிகளாக மாற்றப்பட்டு, காகிதத்தில் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டது’’ என்றார்.