
பாஜக ஆளும் மாநிலங்களில் குற்றச்செயல்கள் அதிக அளவில் நடந்துள்ளன என்றும் உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் தான் அதிக அளவில் குற்றங்கள் நடந்துள்ளன என்றும் தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனால் நாட்டில் நடைபெறும் குற்றச்செயல்கள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், நாட்டிலேயே குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் உத்திரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது என்று தேசிய ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
மொத்த குற்றச்செயல்களில் 9.5 சதவீத குற்றங்கள் உத்திரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளதாகவும் மத்திய பிரதேசத்தில் 8.9 சதவீதமும் மகாராஷ்ராவில் 8.8 சதவீதமும் கேரளாவில் 8.7 சதவீதமும் குற்றங்கள் நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டை விட 2016-ம் ஆண்டு கொலைகள் குறைந்துள்ளது என்றும் 2015-ம் ஆண்டு 32,127 கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், 2016-ம் ஆண்டில் 30,450 கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.