
தொலைக்காட்சிகளில் சீரியல்கள், நடன நிகழ்ச்சிகள், காமெடி நிகழ்ச்சிகள் அனைவராலும் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் நடன நிகழ்ச்சி, சிறுவர்கள் முதல் பெரியவர்களையும் ஈர்த்து வருகிறது.
அனைத்து தொலைக்காட்சிகளிலும் இதுபோன்ற நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று நடனமாடி தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர். ஆனால், நெருப்பு நடனத்தை பார்த்து தானும் அது போன்றே செய்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம், தாவன்ககெரே மாவட்டத்தின் ஹரிஹரா நகரைச் சேர்ந்த சிறுமி பிரார்த்தனா. கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நந்தினி தொடரை தொடர்ந்து பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த தொடரில் வரும் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்று, நெருப்பு நடனம் செய்யும் காட்சி ஒளிபரப்பாகியுள்ளது. இந்த நடனத்தை சிறுமி பிரார்த்தனா விரும்பி பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சிறுமி பிரார்த்தனா தன்னைச்சுற்றி காகிதங்களைக் கொளுத்திப்போட்டு நடனமான முயற்சித்துள்ளாள். அப்போது தீ, அவர் உடல் மீது பற்றி பரவியது. இதில் சிறுமி பிரார்த்தனா பலத்த தீக்காயமடைந்தார். இதன் பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிரார்த்தனா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாங்கள் சொல்வதை ஏற்காமல் சிறுமி பிரார்த்தனா இதுபோன்ற தொடர்களை தொடர்ந்து பார்த்து வந்ததாக அவரின் தாய் கூறியுள்ளார். இந்த சம்பவம் பெற்றோர்களுக்கு பாடாமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.