
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் இந்திய-சீன எல்லையில் குண்டு பாய்ந்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமர் மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள கலங்குழியைச் சேர்ந்தவர் தாசன். இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் ஜான் கிறிஸ்டோபர்; இளைய மகன் ஜஸ்டின் கிறிஸ்டோபர்.
ஜான் கிறிஸ்டோபர் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். ஜஸ்டின் கிறிஸ்டோபர் இந்திய ராணுவத்தில் ஐடிபிபி படைப்பிரிவில் பணியாற்றி வந்தார்.
இமாச்சலப் பிரதேசத்தில் இந்திய-சீன எல்லை பகுதியில் ஜஸ்டின் பணியாற்றிவந்தார். இந்நிலையில், திடீரென நேற்று காலை, ஜஸ்டினின் தந்தையான தாசனை தொடர்புகொண்ட ராணுவ உயரதிகாரி ஒருவர், குண்டு பாய்ந்து ஜஸ்டின் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், ஜஸ்டின் எப்படி இறந்தார் என்பது குறித்த எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
சீன எல்லைப் பகுதியில் பணியாற்றிய ஜஸ்டின், சீன ராணுவத்தினரால் சுடப்பட்டாரா? தீவிரவாதிகளின் தாக்குதலா? அல்லது எப்படி இறந்தார்? என்பது குறித்த தகவல் தெரியாமல் ஜஸ்டினின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். ஜஸ்டின் கிறிஸ்டோபரின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது சொந்த ஊரான கல்லங்குழிக்கு கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட உள்ளது.
ராணுவத்தில் பணியாற்றிய ஜஸ்டின், எதிரிகளுடனோ தீவிரவாதிகளுடனோ சண்டையிட்டு, அதில் தன் உடலில் குண்டை வாங்கி உயிரிழந்தார் என்றால், அவரது குடும்பம் பெருமையடையும். ஆனால், அவர் எப்படி இறந்தார் என்ற தகவலே தெரிவிக்கப்படாததால், குடும்பத்தினர் குழப்பத்திலும் பெரும் சோகத்திலும் உள்ளனர்.