
நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் அதிவேகமாக செல்வதை தடுக்கும் வகையில், வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ் சாலைகளில் செல்லும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்கின்றனர். இதனால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
அதிவேகமாக செல்வதால் ஏற்படும் விபத்துகள் வருடத்திற்கு வருடம் அதிகரித்து கொண்டே செல்கிறது. வேகமாக செல்வதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்தும் விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ் சாலைகளில் விபத்துக்களை தடுப்பது குறித்த ஆய்வை மேற்கொள்ள மத்திய சாலைபோக்குவரத்து துறை அமைச்சகம் சிறப்பு குழு ஒன்றை அமைத்தது.
இதுகுறித்த அறிக்கையில், நெடுஞ்சாலைகளில் வேகமாக செல்வதை தடுக்க வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என கூறி நிதின் கட்கரியிடம் கொடுத்துள்ளனர். இந்த விதிமுறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.