இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோருக்கு ஒரு பயங்கரவாத அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
இந்தியாவில் இருந்து பஞ்சாப் பகுதியைப் பிரிப்பதற்காக பிரச்சாரம் செய்யும் கனடாவைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதி இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கனடாவுக்கான இந்திய உயர் கமிஷனர் சஞ்சய் குமார் வர்மா ஆகியோரைக் குறிவைத்து மிரட்டல் விடுத்துள்ளார்.
தடைசெய்யப்பட்ட Sikh For Justice (SFJ) அமைப்பைச் சேர்ந்த குர்பத்வந்த் சிங் பன்னு என்ற ஒருவர், மற்றொரு பயங்கரவாத தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கு டெல்லி உறுதுணையாக இருப்பதாக குற்றம் சாட்டி, ஒரு வீடியோ மூலம் இந்த மிரட்டலை விடுத்துள்ளார். சீக்கிய தீவிரவாதிகளுக்கு இடையேயான ஒரு கோஷ்டி மோதலில் நிஜ்ஜார் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
யார் இந்த குர்பத்வந்த் சிங் பன்னு?
பன்னு அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளில் பாஸ்ப்போர்ட்டை கொண்ட ஒருவர். மேலும் அவர் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமையால் (NIA) தேடப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பன்னுன், தடை செய்யப்பட்ட SFJ அமைப்பின் சட்ட ஆலோசகர் மற்றும் செய்தித் தொடர்பாளர் ஆவார். நிஜ்ஜார் மறைவுக்கு பிறகு, பன்னு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் இருந்து தனியாக சீக்கிய மாநிலத்தை பிரிக்க வேண்டும் என்ற அழைப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் தீவிரமடைந்துள்ளது. பெரும்பாலும் கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு இவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், வரும் ஆகஸ்ட் 15 அன்று ஒட்டாவா, டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள இந்திய தூதரக வளாகங்களை முற்றுகையிட, கனடாவை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகளுக்கு, SFJ அழைப்பு விடுத்துள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், செப்டம்பர் 10 ஆம் தேதி வான்கூவரில் சீக்கிய வாக்கெடுப்பு நடத்துவதற்கும் இந்தக் குழு அழைப்பு விடுத்துள்ளது.