ரூ.400க்கு கியாஸ் சிலிண்டர்... ரூ.15 லட்சம் மருத்துவக் காப்பீடு... வாக்குறுதிகளை அள்ளித் தெளித்த கே.சி.ஆர்.

By SG Balan  |  First Published Oct 16, 2023, 8:03 AM IST

கட்சி அளித்துள்ள வாக்குறுதிகள் ஆட்சி அமைத்த ஆறு முதல் ஏழு மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் சந்தரசேகர ராவ் உறுதி அளித்துள்ளார்.


தெலுங்கானாவில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) ஏராளமான கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் தொகையை உயர்த்துதல், விவசாயிகளுக்கு 'ரிது பண்டு' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவி அதிகரிப்பு, ரூ.400 க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்குதல் என பல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

தெலுங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் 30ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ராஷ்டிர சமிதியின் தேர்தல் அறிக்கையை பிஆர்எஸ் தலைவரும், முதல்வருமான கே. சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

தனது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்த கேசிஆர், கட்சி அளித்துள்ள வாக்குறுதிகள் ஆட்சி அமைத்த ஆறு முதல் ஏழு மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். முந்தைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பிட்ட 90 சதவீத நலத்திட்டங்களை தனது அரசு செயல்படுத்திவிட்டதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவில் வாழ வேண்டுமானால் பாரத் மாதா கீ ஜெய் என்று சொல்ல வேண்டும்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

வறுமைக் கோட்டிற்குக் கீழ் (பிபிஎல்) வாழும் 93 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். காப்பீட்டுக்கு பிரீமியம் செலுத்தும் பொறுப்பை மாநில அரசே ஏற்கும்.

தற்போது ₹ 2,016 ஆக இருக்கும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக மாதம் ₹ 5,000 ஆக உயர்த்தப்படும். மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் ஆண்டில் ரூ.3,016 ஆக உயர்த்தப்படும். பின்னர் அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ.5,000 ஆக உயர்த்தப்படும்.

தற்போது ரூ.4016 ஆக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ஐந்து ஆண்டுகளில் ரூ.6,016 ஆக உயர்த்தப்படும்.

ரிது பந்து திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகையும் உயர்கிறது. ஆண்டுதோறும் ஒரு ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் வழங்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு ஆண்டுக்கு ரூ.16,000 ஆக வழங்கப்படும்.

தகுதியான பயனாளிகளுக்கு ரூ.400 க்கு காஸ் சிலிண்டர் வழங்கப்படும். மீதமுள்ள செலவை மாநில அரசு ஏற்கும்.

'ஆரோக்ய ஸ்ரீ' சுகாதாரத் திட்டத்தின் கீழ் தகுதியான அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கப்படும் சுகாதாரக் காப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்படும்.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் காலமானார்

click me!