
பணி நியமன ஊழல் வழக்கு தொடர்பாக தேஜஸ்வி யாதவ் சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி நிலம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ரயில்வே வேலை பெறுபவர்களிடம் இருந்து லஞ்சமாக நிலம் வாங்கி தனது குடும்பத்தினரின் பெயரில் லாலுபிரசாத் யாதவ் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுத்தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: ஒரு பத்திரிக்கையாளராக இருந்து பாஜக ஆதரவு கேள்விகளை இங்கே கேட்காதீர்கள்! - ராகுல்காந்தி காட்டம்!
இதை அடுத்து லாலுபிரசாத் யாதவ், அவருடைய மனைவியும், முன்னாள் முதல்வர் ராப்ரிதேவி, இளைய மகனும், பீகாரின் தற்போதைய துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த பணி நியமன ஊழல் தொடர்பாக நேரில் ஆஜராக தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஏற்கனவே தேஜஸ்வி யாதவிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர் ஆஜராகமால் இருந்தார். இந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக தேஜஸ்வி யாதவ் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் ரயில்வே பணி நியமன ஊழல் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: கர்நாடகா மாநிலத்தில் ஒக்கலிக்கர், லிங்காயத் சமூகத்தினரை ஈர்க்க பாஜக புதிய திட்டம்!!
முன்னதாக தேஜஸ்வி யாதவை இந்த மாதம் கைது செய்ய மாட்டோம் என்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ உறுதி அளித்து இருந்தது. எனவே தேஜஸ்வி யாதவ் விசாரணைக்கு பிறகு கைது செய்யப்படவில்லை. தேஜஸ்வி யாதவ் வழக்கு விசாரணைக்காக ஆஜராகியிருப்பதால் சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதற்கிடையே, இதே வழக்கில் லாலுபிரசாத் யாதவின் மகளும் தேஜஸ்வி யாதவின் சகோதரியுமான மிசா பார்தி அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். மிசா பார்தி மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.