
தற்போது கர்நாடகா மாநிலத்தை ஆட்சி செய்து வரும் பாஜக அரசு அந்த மாநிலத்தின் முக்கிய இரண்டு சமூகத்தினர்களான லிங்காயத் மற்றும் ஒக்கலிக்கர் சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீட்டில் இரண்டு சதவீதம் அளித்துள்ளது. அதேசமயம், பொருளாதாரத்தில் நலிந்த சிறுபான்மையினருக்கு வழங்கியிருந்த இட ஒதுக்கீட்டில் இருந்து நான்கு சதவீதத்தை எடுத்து இந்த இரண்டு சமூகத்தினருக்கும் வழங்கியுள்ளனர். இதனால் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு 14 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைந்துள்ளது.
அதேசமயம் நீண்ட காலம் கிடப்பில் போட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உள் இட ஒதுக்கீட்டையும் அமல்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த புதிய இட ஒதுக்கீடு மூலம் அரசு வேலை வாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் லிங்காயத் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு 7 சதவீதமாகவும், ஒக்கலிக்கர் சமூகத்தினருக்கான ஒதுக்கீடு 6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அமைச்சரவை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பசவராஜ் பொம்மை, ''அமைச்சரவையில் இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் அரசு ஆணை மூலம் நிறைவேற்றப்படும். சிறுபான்மையினரின் இடஒதுக்கீட்டை எடுத்துள்ளதால், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இடஒதுக்கீடு மதத்திற்கு கிடையாது. ஜாதிக்குத்தான்'' என்று தெரிவித்துள்ளார்.
இதேபோன்று தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மடிகா பிரிவினரும் கோரிக்கை வைத்துள்ளனர். சதாசிவ கமிஷன் அறிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் 18 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வலது, இடது என்று பிரிக்கப்பட்டுள்ளனர். அதாவது, முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடது என்றும், அம்பேத்கர், புத்த மதத்தை நம்புபவர்கள் வலது என்றும் அழைக்கப்பட்டு வருகின்றனர். மடிகா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடது பிரிவைச் சேர்ந்தவர்கள். சாலவாடி, லம்பானி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வலது பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் பொதுவாக வலது மற்றும் இடது பிரிவைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வந்துள்ளனர். ஆனால், சாலவாடி சமூகத்தினருக்கு பாஜக அரசு அவ்வப்போது சலுகைகள் அளித்து வந்ததால், இது மடிகா சமூகத்தினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தான் சதாசிவம் கமிட்டியின் பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர். சதாசிவம் கமிட்டி அறிக்கையின்படி தற்போது இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் மே மாதத்தில் நடக்கவிருக்கும் தேர்தலில் இந்த சமூகத்தினரை ஈர்ப்பதற்கு என்றே ஒதுக்கீடு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் எஸ்டி, எஸ்சி பிரிவினர் முறையே நான்கு மற்றும் இரண்டு சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருந்தது.