இக்கட்டான வேளையில் இந்தியாவுக்கு ஆதரவு.. கொரோனாவுக்கு எதிராக ஒன்றுபடுவோம்.. பாக். பிரதமர் இம்ரான்கான்!

By Asianet Tamil  |  First Published Apr 24, 2021, 8:38 PM IST

கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள, இந்திய மக்களுக்கு இந்த இக்கட்டான வேளையில் நாங்கள் ஆதரவாக இருப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். 
 


இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் அதிகபட்சமாக 3.46 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி இறப்பு எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துவிட்டது. தவிர மருத்துவமனைகளில் படுக்கை வசதி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பு மருந்து பற்றாக்குறைகளும் நிலவி வருகின்றன. இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பையொட்டி ‘#indianeedsoxygen என்ற ஹாஷ்டேக்கை பாகிஸ்தான் நெட்டிசன்கள் ட்விட்டரில் வைரலாக்கினார்கள். இந்தியர்களுக்கு பாகிஸ்தான் உதவ வேண்டும் என்றும் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானுக்கு கோரிக்கையும் விடுத்தனர்.


இந்நிலையில் இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  அதில், “இந்த உலகிலும் அண்டை நாட்டிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைந்து குணமடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம். கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள, இந்திய மக்களுக்கு இந்த இக்கட்டான வேளையில் நாங்கள் ஆதரவாக இருப்போம் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். உலகிற்கே சவாலாக இருக்கும் இந்த கொரோனா வைரஸுக்கு எதிராக மனித சமுதாயம் ஒன்றிணைந்து போரிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இம்ரான்கானைப் போலவே பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரோஷி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி ஆகியோரும் இந்தியாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளனர். கொரோனா வைரஸால் இந்தியா சிக்கி திணறும் நிலையில், சீனா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் உதவ முன்வந்துள்ளன. இந்நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானும் இந்த நேரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது. 

Tap to resize

Latest Videos

click me!