இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை உயர்த்தப்பட்டுள்ளதா? உண்மை என்ன?

By Selva KathirFirst Published Apr 24, 2021, 1:21 PM IST
Highlights

இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி விலை உயர்த்தப்பட்டுவிட்டதாக திடீரென தமிழகத்தில் எதிர்கட்சிகள் கூக்குரலிட்டு வருகின்றன, ஆனால் அது உண்மையா?

இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி விலை உயர்த்தப்பட்டுவிட்டதாக திடீரென தமிழகத்தில் எதிர்கட்சிகள் கூக்குரலிட்டு வருகின்றன, ஆனால் அது உண்மையா?

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் – அஸ்ட்ரஜெனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில் புனேவை சேர்ந்த சீரம் எனும் நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனை செய்ய உரிமையை பெற்றுள்ளது. இந்த நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் முதல் உற்பத்தியை துவக்கியது. அப்போது கோவிஷீல்டு தடுப்பூசிகளை நேரடியாக மத்திய அரசிடம் விற்பனை செய்ய வேண்டும் என்கிற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் மத்திய அரசு விலை கொடுத்து கோவிஷீல்டு தடுப்பூசியை சீரம் நிறுவனத்திடம் வாங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸ்க்கு விலை ரூ.150ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதாவது கொரோனா எனும் நெருக்கடியான காலகட்டத்தில் இந்திய மக்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் சீரம் நிறுவனம் சலுகை விலையில் அதாவது ரூ.150 என்ற விலையில் கோவிஷீல்டை விற்பனை செய்ய முன்வந்தது. ஆனால் தடுப்பூசி இறுதிகட்டத்தில் இருந்த போது பேசிய சீரம் நிறுவனம் சிஇஒ  அடால் பூனாவல்லா, இந்தியாவில் வெளிச்சந்தையில் ஒரு டோஸ் கோவிஷீல்டை ஆயிரம் ரூபாய்க்கு விற்க இயலும் என்று கூறியிருந்தார். அந்த விலையோடு ஒப்பிடுகையில் மத்திய அரசுக்கு வெறும் 150 ரூபாய்க்கு சீரம் கோவிஷீல்டை கொடுத்தது.

இதுநாள் வரை சீரம் நிறுவனத்திடம் இருந்து பெற்ற கோவிஷீல்டை மத்திய அரசு, மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப இலவசமாக பிரித்துக் கொடுத்து வந்தது. ஆனால் தற்போது வரும் ஒன்றாம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அத்துடன் இனி மாநிலங்கள் தங்களுக்கு தேவையான கொரோனா தடுப்பூசியை நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து கொள்ள அனுமதி அளித்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளும் இனி நேரடியாக மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை வாங்கிக் கொள்ள முடியும்.

இதனை தொடர்ந்து மாநில அரசுகள் தங்களின் கோவிஷீல்டு தடுப்பூசியை நேரடியாக பெற வேண்டும் என்றால் ஒரு டோசுக்கு 400 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தனியார் மருத்துவமனைகள் என்றால் 600 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் சீரம் நிறுவனம் விலை நிர்ணயம் செய்தது. இதனைத்தான் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினரும் விலை உயர்வு என்ற கூறி வருகின்றனர். உண்மையில் ஏற்கனவே மத்திய அரசுக்கு சீரம் வழங்கியது சலுகை விலையில், தற்போது மாநில அரசுகளுக்கும் சலுகை விலையில் தான் சீரம் விற்பனை செய்ய உள்ளது.

ஏனென்றால் ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் வி எனும் கொரோனா தடுப்பூசி சர்வதேச அளவில் பத்து டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது இந்திய மதிப்பில் 750 ரூபாயாகும். இதனை ஒப்பிடுகையில் மாநில அரசுகளுக்கு சீரம் வழங்க ஒப்புக் கொண்ட விலை 350 ரூபாய் குறைவானது தான். எனவே மத்திய அரசுக்கு சீரம் வழங்கிய சலுகை விலையை புதிய விலையுடன் ஒப்பிட்டு விலை உயர்வு என்று கூறக்கூடாது என்றும் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசியை சீரம் 400 ருபாய்க்கு மாநிலங்களுக்கு கொடுப்பது சலுகை விலை தான் என்கிறார்கள் மருத்தவ நிபுணர்கள்.

click me!