ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்ய என்ன செய்ய வேண்டும்..? ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களுக்கு பிரதமர் மோடியின் ஆலோசனை

Published : Apr 23, 2021, 07:04 PM IST
ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்ய என்ன செய்ய வேண்டும்..? ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களுக்கு பிரதமர் மோடியின் ஆலோசனை

சுருக்கம்

ஆக்ஸிஜன் பற்றாக்குறையை பூர்த்தி செய்வது குறித்து முன்னணி ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி.  

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தேசியளவில் தினமும் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகிவருவதால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்துள்ளது.

மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் ஆக்ஸிஜன் அளவு போதாத நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தீர்ப்பது குறித்தும், ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரித்து, அவற்றை மாநிலங்களுக்கு தேவைக்கேற்ப விநியோகம் செய்வது குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, இன்று முன்னணி ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில், முன்னணி ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுவன தலைவர்களும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். முகேஷ் அம்பானி, சோமா மண்டல், சஜ்ஜன் ஜிண்டால், , டாடா ஸ்டீல் நிறுவனம் சார்பில் நரேந்திரன், ஜேஎஸ்பிஎல் நிறுவனத்தின் நவீன் ஜிண்டால், லிண்டே நிறுவனத்தின் எம்.பானர்ஜி, ஐநாக்ஸ் சார்பில் சித்தார்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

காணொலி காட்சி மூலம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மோடி, ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்வதில் உள்ள சவால்கள் குறித்து மட்டுமல்லாது குறுகிய காலத்தில் ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்கான தீர்வு குறித்தும் பேசியுள்ளார். ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுவனங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

கடந்த சில வாரங்களாக ஆக்ஸிஜன் உற்பத்தியை நிறுவனங்கள் அதிகரித்திருப்பதற்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி, திரவ ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஒப்புக்கொண்டார். தொழிற்சாலைக்கு தேவையான ஆக்ஸிஜனை மருத்துவ அவசரத்திற்கு பயன்படுத்த வழங்கியதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

மாநிலங்களின் ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆக்ஸிஜனை விரைந்து விநியோகம் செய்ய ஏதுவாக, ரயில்வே துறை மற்றும் விமானத்துறையுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டு கொண்டிருப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கத்தின் முழு ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில் விரைவில் இந்தியா வெல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!