
ஜார்கண்ட் மாநிலம், கிரித் மாவட்டத்தில் முஸ்லிம் முதியவர் வீட்டு அருகே ஒரு மாடு செத்துக்கிடந்ததைப் பார்த்த 100 பேர் கொண்ட கும்பல் அவரை அடித்து, உடைத்து காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்தபோலீசார், துப்பாக்கி சூடு நடத்தி அந்த கும்பலைக் கலைத்தனர்.
பசுமாடு இறந்தது
ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. முதல்வராக ரகுபர் தாஸ் பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில், கிரித் மாவட்டம், பெரியா ஹாடியாடண்ட் கிராமத்தைச் சேர்ந்தவர் உஸ்மான் அன்சார். இவர் வளர்த்த பசுமாடு ஒன்று நோய் தாக்கியதையடுத்து, இயற்கையாக இறந்தது.
தாக்குதல், தீவைப்பு
ஆனால் பசுமாட்டை உஸ்மான் அன்சாரிதான் கொன்றுவிட்டதாக தகவல் பரவியது. இதனால், 100க்கும் மேற்பட்டவர்கள் அன்சாரி வீட்டு முன் திரண்டனர். வீட்டில் இருந்தஅன்சாரியையும், அவர்களின் குடும்பத்தினரையும் சரமாரியாக தாக்கி, வீட்டுக்கும், அருகில் இருந்த பால் பண்ணைக்கும் தீவைத்தனர்.
துப்பாக்கி சூடு
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, அந்த கும்பலை கலைத்தனர். ஆனால், போலீசார் மீது கற்களை வீசி அந்த கும்பல் தாக்கியதையடுத்து, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்தனர். மேலும், போலீசாரின் இந்த துப்பாக்கி சூட்டில் கும்பலில் இருந்த கிருஷ்ணா பண்டிட் என்பவர் காயமடைந்தார். கல்வீச்சில் 50 போலீசார் காயமடைந்தனர்.
உயிருக்கு போராட்டம்
இதையடுத்து, கும்பலின் தாக்குதலில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய முதியவர்அன்சாரியையும், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த கிருஷ்ணா பண்டிட்டையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக ேசர்க்கப்பட்டனர். இதில் முதியவர் அன்சாரிநிலை கவலைக்கிடமாக உள்ளது. இதையடுத்து, அந்த கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதன் காரணமாக அங்கு பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடரும் தாக்குதல்கள்
ரம்ஜான் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து மதுரா செல்லும்ரெயிலில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் ஒருகும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தால் தொடர்ந்து போராட்டங்களும், ஆர்ப்பாட்டமும் நடந்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.