
முதலமைச்சர் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் போலீஸ் அதிகாரிகள், செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் மாநில டிஜிபி, காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற சில அதிகாரிகள் கையில் செல்போனை வைத்துக் கொண்டு கேம் விளையாடிக் கொண்டிருந்தனர். முதலமைச்சர் கலந்து கொண்டுள்ள கூட்டத்தில் பங்கேற்றிருந்த போதும், காவல் அதிகாரிகள் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
இன்னும் சில அதிகாரிகள் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து வெளியான மீம்சுகளை பார்த்துக் கொண்டிருந்தனர். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது வலைத்தளத்தில் வைரலாகிக் கொண்டு வருகிறது.
முதலமைச்சரின் கூட்டத்திலேயே காவல் உயர் அதிகாரிகள் பொறுப்பின்றி நடந்து கொண்டது குறித்து காரசாரமான கருத்துகளும் பதிவிடப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் பெரிதாக வெடித்துள்ள நிலையில், மாநில கூடுதல் டிஜிபி சிங்கால், இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மூத்த அதிகாரிகள் இல்லை என்றும் அவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.