கேரளாவைத் துரத்தும் சோகம் … பரவும் எலிக் காய்ச்சல்… 5 நாட்களில் 23 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி !!

By Selvanayagam PFirst Published Sep 1, 2018, 1:04 PM IST
Highlights

கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் தற்போது எலிக்காய்ச்சல் பரவி வருவதாகவும், கடந்த 3 நாட்களில் மட்டும் எலிக் காய்ச்சலால் 23 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.


 

கேரள மாநிலத்தில் கடந்த மே மாத இறுதியில் தென் மேற்குப் பருவமழை தொடங்கியது. ஒரு மாதம் வரை சீரான மழை பெய்து கேரளா கடவுளின் தேசமாக காட்சியளித்தது. ஆனால் கடந்த மாதம்  8-ம் தேதி பெய்யத் தொடங்கிய பருவமழை, தீவிரமடைந்து அம்மாநில மக்களை வெள்ளத்தில் தத்தளிக்க விட்டது.

லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளதால், மத்திய, மாநில அரசுகள் என அனைத்துத் தரப்பிலும் இருந்து நிவாரண உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன.

தற்போத  வெள்ளம் வடிந்த நிலையில் மீட்புப் பணிகள் அதி தீவிரமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில், மழைக் காரணமாக நோய்த் தொற்றுகளும் அதிகரித்துள்ளது.



இந்நிலையில் தற்போது  எலிக்காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  எலிக்காச்சலால் பலர் இறந்துபோனதாக கேரள சுகாதரத்துறை உறுதி செய்துள்ளது. இதனால், சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மாநிலம் முழுவதும் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 5 நாட்களில் எலிக்காய்ச்சலுக்கு 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எலியின் சிறுநீர் மூலம் (லெப்டோஸ்பை ரோசிஸ்) மனிதர்களுக்கு எலி காய்ச்சல் பரவுகிறது.

இதில் கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், திருவனந்தபுரம், திருச்சூர், மலப்புரம் ஆகிய இடங்களிலும் இந்த பாதிப்பு இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



மேலும் காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட தொற்று நோய்களின் அறிகுறிகள் தென்பட்டால், மக்கள் தாங்களாகவே சுய சிகிச்சை செய்து கொள்வதை தவிர்க்கும்படியும், அருகில் உள்ள சுகாதார மையத்தை ஆலோசிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது கேரளாவில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், எலிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

click me!