எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சில் இருந்து திடீரென வெளியேறிய புகை.. பாதியில் நிறுத்தப்பட்ட ரயில்

By Ramya sFirst Published Jun 6, 2023, 7:42 PM IST
Highlights

செகந்திராபாத்-அகர்தலா எக்ஸ்பிரஸ் ஏசி கோச்சில் இருந்து புகை வந்ததால் ஒடிசா பிரம்மாபூர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.

இன்று செகந்திராபாத்-அகர்தலா விரைவு ரயிலில் ஏசி பெட்டி ஒன்றில் ஏசி யூனிட்டில் இருந்து புகை வெளியேறியது. ரயிலின் பி-5 பெட்டியில் புகை வெளியானதை அடுத்து பயணிகள் பிரம்மபூர் ரயில் நிலையத்தில் இறங்கினர். உடனடியாக புகையை கட்டுப்படுத்திய போதிலும், பீதியடைந்த பயணிகள் மீண்டும் மின்கசிவு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பெட்டியில் பயணிக்க மறுத்துவிட்டனர். மேலும் தங்களின் கோச்-ஐ மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். புகையை கட்டுப்படுத்திய பின் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

கிழக்கு கடற்கரை ரயில்வே (ECoR) அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது "பிரம்மாபூர் ஸ்டேஷன் அருகே செகந்திராபாத்-அகர்தலா எக்ஸ்பிரஸின் பெட்டி எண். B-5 இல் சிறிய மின் பிரச்சனை ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது. பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக பிரச்சினையை சரிசெய்தனர்," என்று தெரிவித்தார்.

கடந்த 2-ம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நடந்த கோர ரயில் விபத்து நாட்டையே உலுக்கியது. பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் விபத்தில் சிக்கியதால் பெரும் சேதம் ஏற்பட்டது. சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், அருகில் உள்ள தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியதில், கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பின்புற பெட்டிகள் மூன்றாவது பாதையில் கவிழ்ந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டது.

அதே நேரத்தில் அந்த வழியாகச் சென்ற பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸின் கடைசி சில பெட்டிகள் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் கவிழ்ந்தன. நாட்டின் மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக கருதப்படும் இந்த விபத்தில் 275-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

click me!