யஸ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ஒடிசாவின் பாலசோரில் தடம் புரண்ட கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது மோதியதால் மேலே இருக்கும் மின்சார வயர்கள் அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் குறைந்தது 40 பயணிகளுக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லாததால், அறுந்து விழுந்த மின்சார வயர் மூலம் மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. யஸ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ஒடிசாவின் பாலசோரில் தடம் புரண்ட கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது மோதியதால் மேலே இருக்கும் மின்சார வயர்கள் அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
மீட்புப் பணியை மேற்பார்வையிட்ட ஒரு போலீஸ் அதிகாரியும் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். ரயில் பெட்டிகளில் நேரடி மேல்நிலை வயர்கள் விழுந்ததால் மின்சாரம் தாக்கி பல இறந்திருக்கக் கூடும் என்று அவர் கூறியுள்ளார். ரயில்வே காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் பப்பு குமார் நாயக், சனிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில், “"பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைக்கப்பட்டிருந்தாலும், அங்கு 40 பேர் காயங்கள் அல்லது ரத்தப் போக்கு இல்லாமல் இருந்தனர். இந்த இறப்புகளில் பெரும்பாலானவை மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்டிருக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கிழக்குக் கடற்கரை ரயில்வேயின் தலைமை இயக்க மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பூர்ண சந்திர மிஸ்ரா இதுகுறித்து பேசிய போது “மின்சாரம் தாக்கியவர்கள், மேல்நிலை மின்சார கேபிள்கள் ரயிலில் விழுந்த போது, அந்த வினாடியில் ரயில் பெட்டிகளின் சில பகுதிகளுடன் தொடர்பில் இருந்திருக்கலாம்.” என்று கூறியுள்ளார்.
இதனிடையே இந்த கோர ரயில் விபத்து தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது அலட்சியம் காரணமாக மரணம் (IPC இன் பிரிவு 304-A) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ரயில்வே காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் தொடர்பான விசாரணைக்கு தலைமை தாங்க டிஎஸ்பி தரவரிசை அதிகாரியை நியமித்தது. விபத்து நடந்து சுமார் 6 மணி நேரம் கழித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கட்டாக்கின் சப்-டிவிஷனல் ரயில்வே போலீஸ் அதிகாரி ரஞ்சீத் நாயக்கிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டது.
மின்னணு இன்டர்லாக் அமைப்பில் "வேண்டுமென்றே குறுக்கீடு செய்ததால்" விபத்து நடந்ததாக உயர் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான விசாரணையை சிபிஐ இன்று தொடங்கிய நிலையில் இது தெரியவந்துள்ளது.
முன்னதாக ஜூன் 2ஆம் தேதி காலை 6.55 மணியளவில் ஒடிசாவின் பாலசோரில் நடந்த மூன்று ரயில் விபத்து எலக்ட்ரானிக் சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட பிழையால் ஏற்பட்டது என்று ரயில்வே கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது. அதிவேக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மெயின் டிராக் லைனில் இயக்க சிக்னல் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் பின்னர் சிக்னல் மாறியதாகவும், அதற்கு பதிலாக அந்த ரயில் அருகில் உள்ள லூப் லைனில் நுழைந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக மூத்த ரயில்வே அதிகாரி ஜெய வர்மா சின்ஹா தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் “ இரும்பு தாது ஏற்றப்பட்ட சரக்கு ரயில் மீது மோதியதால் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பெட்டிகள் மற்றொரு பாதையில் கவிழ்ந்தன, இதனால் எதிர்புறத்தில் இருந்து வந்த யஸ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. 2,296 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் ரயில்கள் அதிக வேகத்தில் செல்லவில்லை. சரக்குகளை ஏற்றிச் செல்லும் ரயில்கள் பெரும்பாலும் அருகில் உள்ள லூப் லைனில் நிறுத்தப்படுகின்றன, எனவே கடந்து செல்லும் ரயிலுக்கு மெயின் லைன் தெளிவாக இருக்கும். விபத்துக்கான மூல காரணம் மின்னணு சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட பிழையே என்று கூறினார். விரிவான விசாரணையில் தவறு மனிதனா அல்லது தொழில்நுட்பமா என்பது தெரியவரும்” என்று தெரிவித்தார்.
சுமார் 64,000 கிலோமீட்டர்கள் ரயில் பாதையில் ஒவ்வொரு நாளும் சுமார் 22 மில்லியன் மக்கள் இந்தியா முழுவதும் 14,000 ரயில்களில் பயணிக்கின்றனர். இந்தியாவில் பெரும்பாலான ரயில் விபத்துக்கள் மனித பிழை அல்லது காலாவதியான சிக்னல் கருவிகளால் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.