மாநில நலனை கருத்தில் கொண்டு தனது தந்தை முதலமைச்சராக வருவார் என்று சித்தராமையாவின் மகன் யதீந்திர சித்தராமையா நம்பிக்கை தெரிவித்தார்.
கர்நாடகா தேர்தலில் பாஜகவை விட காங்கிரஸ் முன்னிலையில் உள்ள நிலையில், மாநில நலனை கருத்தில் கொண்டு தனது தந்தை முதலமைச்சராக வருவார் என்று சித்தராமையாவின் மகன் யதீந்திர சித்தராமையா நம்பிக்கை தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர் “ஒரு மகனாக, நிச்சயமாக நான் அவரை முதலமைச்சராக பார்க்க விரும்புகிறேன். அவரது கடந்த ஆட்சியில் மிகச் சிறந்த ஆட்சி இருந்தது, இந்த முறையும், அவர் முதல்வராக இருந்தால், பாஜக ஆட்சியில் நடந்த ஊழல்கள், தவறுகளை சரி செய்வார்," என்று கூறினார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது என்றாலும், யார் முதலமைச்சர் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் இடையே முதல்வர் பதவிக்கான போட்டி நிலவுகிறது. இந்த சூழலில் தான் சித்தராமையாவின் மகன், தனது தந்தை முதலமைச்சராக வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று சித்தராமையா காங்கிரஸ் தலைவர்களுடன் தனித்தனியாக தனது இல்லத்தில் சந்திப்புகளை நடத்தியபோது, கட்சி தலைமையின் முடிவுக்கு தான் கட்டுப்படுவேன் என்று கூறினார். மேலும் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் கட்சிக்காக பாடுபட்டுள்ளேன், அனைவரும் (என்னை) ஆதரிப்பார்கள். இடைத்தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து (2019) தினேஷ் குண்டுராவ் ராஜினாமா செய்த பிறகு (கேபிசிசி தலைவர்) பொறுப்பு எனக்கு கிடைத்தது. அதன் பிறகு நான் தூங்கவில்லை, தூங்கவும் மாட்டேன். கட்சிக்கு தேவையானதை நான் செய்துள்ளேன்... அனைவரும் (என்னை) ஆதரிப்பார்கள், நல்ல ஆட்சியை வழங்குவேன்..” என்று தெரிவித்தார்.
கர்நாடகாவில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மதியம் 2 மணி நிலவரப்படி காங்கிரஸ் 137 இடங்களிலும், பாஜக 63 இடங்களிலும், ஜேடிஎஸ் 20 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். அந்த வகையில் தனது சொந்த தொகுதியான வருணா தொகுதியில் சித்தராமையா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அந்த தொகுதியில் 2.3 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர், இதில் லிங்காயத்துகள் பெரும்பான்மையாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சுக்கு நூறாக உடைந்த தேர்தல் வியூகம்.. தென் இந்தியாவில் இருந்து வாஷ் அவுட்டான பாஜக..