
பிட் காயின் மோசடி தொடர்பாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி, கடந்த வருடம் இறுதியில் பிட் காயினை பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கையையும் மீறி இந்தியாவில் சிலர் பிட் காயினை உபயோகப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், பிட்காயின் முறைகேடு தொடர்பாக தொழிலதிபரும், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக ராஜ்குந்த்ராவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அண்மைக் காலமாக ராஜ்குந்த்ரா, பிட்காயின் எனப்படும் மெய்நிகர் கரன்சி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து ரகசிய கண்காணிப்புக்கு பிறகு மும்பை உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியின்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி வாழ்நாள் முழுவதும கிரிக்கெட் தொடர்பான எந்த நடவடிக்கைகளிலும் ஈடபடக் கூடாது என்று ராஜ்குந்த்ராவுக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.