சமூக வலைத்தளங்களை பயன்படுத்த குறைந்தபட்ச வயது நிர்ணயம் செய்யுங்கள்: உயர் நீதிமன்றம் பரிந்துரை

By SG BalanFirst Published Sep 20, 2023, 9:12 AM IST
Highlights

பள்ளி செல்லும் குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த வயது வரம்பு நிர்ணயம் செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

இளைஞர்கள், குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் சமூக ஊடகங்களை அணுகுவது தடைசெய்யப்பட்டால் அது தேசத்திற்கு நல்லது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணை ஒன்றின்போது இதனைத் தெரிவித்த நீதிமன்றம், வாக்களிக்கும் உரிமையைப் பெறுவதற்கான வயது 21 அல்லது 18 ஆக இருக்க வேண்டும் என்பது போல சமூக வலைத்தளத்தைப பயன்படுத்தவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப் பரிந்துரைத்துள்ளது.

முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட எக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஜி நரேந்தர் மற்றும் விஜயகுமார் ஏ பாட்டீல் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி இருக்கும் குழந்தைகள் தாமதமாக பள்ளி செல்கிறார்கள் என்றும் அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டால் அது தேசத்துக்காக நல்லது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

மேல்முறையீட்டாளர் தாக்கல் செய்த இரண்டு இடைக்கால மேல்முறையீடுகளில் புதன்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இனி பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தை இப்படி அழைப்போம்! புதிய பெயர் சூட்டிய பிரதமர் மோடி!

உள்ளடக்கம், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000ன் பிரிவு 69A (1) மற்றும் (2) ஆகியவற்றை மீறுகிறதா என்பதுதான் ஆராயப்பட வேண்டிய ஒரே அம்சம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. "இந்த விதிகள் மீறப்பட்டால், மேல்முறையீடு செய்பவர் (எக்ஸ் நிறுவனம்) தடை உத்தரவுகளுக்கு இணங்க வேண்டும்" எனவும் அறிவுறுத்தியுள்ளது.

சென்ற ஆகஸ்ட் 10 அன்று, தலைமை நீதிபதி பிரசன்னா பி வரலே தலைமையிலான அமர்வு, எக்ஸ் நிறுவனத்திற்கு ஒரு வாரத்திற்குள் ரூ.25 லட்சம் தொகையை டெபாசிட் செய்யுமாறு உத்தரவிட்டது.

2021ஆம் ஆண்டு பிப்ரவரி மத்திய அரசு பிறப்பித்த தொடர்ச்சியான தடை உத்தரவுகளை எதிர்த்து எக்ஸ் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்ட ரூ.50 லட்சத்தில் 50 சதவீதத்தை மட்டும் செலுத்த உத்தரவிடப்பட்டது.

மேல்முறையீட்டில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69A(1)ன்படி எழுத்துப்பூர்வமாக காரணங்களைக் கொண்டிருக்க தடை உத்தரவுகள் தேவையில்லை என்று கூறியுள்ளது. மேலும், 14வது விதியை மத்திய அரசு கடைபிடிக்கத் தவறியதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

நெருப்புடன் விளையாடுகிறார்கள்! மேற்கத்திய நாடுகளில் குர்ஆன் எரிப்பு குறித்து இஸ்லாமிய நாடுகள் கண்டனம்

click me!