மக்களவை தேர்தல் 2024 தேதி நாளை மாலை மூன்று மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நாளை பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. அப்போது மக்களவை தேர்தல் தேதி மற்றும் சில மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தேதியும் நாளை அறிவிக்கப்பட உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், புதிய தேர்தல் ஆணையர்கள் கூட்டாக தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும்.
தற்போதைய லோக்சபாவின் பதவிக்காலம் ஜூன் 16ம் தேதியுடன் முடிவடைகிறது, அதற்கு முன் புதிய அவை அமைக்கப்பட வேண்டும். எனவே 2024 மக்களவை தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது. இந்த சூழலில் நாடே எதிர்பார்த்த அந்த அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளான ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக பொறுப்பேற்ற நிலையில் தேர்தல் அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை தேர்தல் ஆணையர்களாக பொறுப்பேற்றனர்.
அருணாச்சல பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்/மே மாதத்தில் நடைபெற்ம் என எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநில சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும்.. 2024 மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா அணிக்கும் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2019 மக்களவைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 10ஆம் தேதி அறிவித்தது. மக்களவைத் தேர்தல் 2019 ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது. முடிவுகள் மே 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.