சுகாதாரத் துறையில் 2014ஆம் ஆண்டு முதல் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வீட்டுவசதித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பெருமிதம் தெரிவித்துள்ளார்
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 ஆம் தேதி கொண்டாடப்படும் உலகக் கழிவறை தினம், கழிவறைகளை அமைப்பதற்கான தடைகளை உடைக்கவும், அனைவருக்குமான சுகாதாரத்தை உலகளாவிய வளர்ச்சி முன்னுரிமையாக மாற்ற உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. எண்ணற்ற சுகாதார மற்றும் சுகாதாரக் கவலைகளை நிவர்த்தி செய்யும் இந்தியாவின் தூய்மை இயக்கத்தின் மையமாக கழிவறைகள் இருந்ததால் இந்த நாள் இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
அந்த வகையில், உலகக் கழிவறை தினத்தை முன்னிட்டு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “இந்தியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் எந்த முன்முயற்சியும், தூய்மை இயக்கத்தை உள்ளடக்கியே இருந்தது. 2014 ஆம் ஆண்டில் இந்தியாவின் 37% பகுதி மட்டுமே திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையைக் கொண்டிருந்தது. 2019 ஆம் ஆண்டில், கழிவறைகளைக் கட்டுவதன் மூலம் நாம் இந்த விஷயத்தில் கிட்டத்தட்ட முழுமை அடைந்துள்ளோம்” என்றார்.
2014ஆம் ஆண்டு முதல் சுகாதாரத்தில் அரசு அதிக கவனம் செலுத்துவதைக் குறிப்பிட்ட அமைச்சர், மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அக்டோபர் 2, 2019க்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத இந்தியாவை அடைவதற்காக உலகின் மிகப்பெரிய சுகாதார முன்முயற்சியான தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கியதை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நினைவு கூர்ந்தார்.
தூய்மை இந்தியா இயக்கத்தின் மூலம் நகர்ப்புற இந்தியாவில் சுகாதார அமைப்பை மாற்றியமைப்பது குறித்து பேசிய அமைச்சர், இந்த இயக்கத்தின் கீழ் முன்னெப்போதும் இல்லாத வகையில் கழிவறைகள் கட்டப்படுவது திறந்தவெளி கழிப்பிடமற்ற நகர்ப்புறங்களின் துணிச்சலான இலக்கை அடைய உதவியது என்று குறிப்பிட்டார்.
பெண்கள், சிறுமிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையில் இந்த இயக்கம் எவ்வாறு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்பது குறித்து அமைச்சர் பேசினார். இந்த இயக்கம் பெண்களுக்கு உகந்த கழிவறைகளை ஊக்குவித்துள்ளது. தற்காலிக தொழிலாளர்களை முறைப்படுத்தியுள்ளது மற்றும் சுகாதாரத்தில் பெண்கள் தலைமையிலான நிறுவனங்களை ஊக்குவித்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரமளிக்க வழிவகுக்கிறது என்று அவர் கூறினார். தூய்மை தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தில் தூய்மை இந்தியா இயக்கம் கொண்டு வந்துள்ள கவனத்தையும் அப்போது அமைச்சர் குறிப்பிட்டார்.