டீப் ஃபேக் தொழில்நுட்பம் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஊடகங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்
ஆன்லைனில் முன்னணி சினிமா நடிகைகளை குறிவைத்து டீப்-ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற உள்ளடக்கத்தை உருவாக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற தீபாவளி மிலன் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, டீப்ஃபேக் வீடியோக்கள் மீது உஷாராக இருக்கவும், இதுபோன்ற வீடியோக்கள் இணையத்தில் பரவும்போது எச்சரிக்கை செய்யவும் ChatGpt குழுவைக் கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.
செயற்கை நுண்ணறிவால் இயங்கும் தொழில்நுட்ப அம்சமான டீப்ஃபேக்கை பிரச்சினைக்குரியது என சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, அதனுடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து பொதுமக்களுக்குக் கற்பிப்பதில் ஊடகங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
செயற்கை நுண்ணறிவின் ஆழமான கற்றல் எனப்படும் ஒரு வடிவத்தைப் பயன்படுத்தி, உண்மையான நபர்களின் போலி வீடியோக்களை டீப்ஃபேக்குகள் உருவாக்குகின்றன. அதாவது இந்த தொழில்நுட்பம் மூலம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, வேறு ஒருவரது முகத்துக்கு பதிலாக அப்படியே அச்சுஅசலாக மற்றொருவரின் முகத்தை அந்த இடத்தில் வைக்க முடியும். வீடியோவில் உள்ளவர்கள், அவர்கள் செய்யாத ஒன்றைச் செய்தது போல காட்டமுடியும்.
சமீபத்தில், நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் மற்றும் கஜோல் ஆகியோரின் மார்பிங் செய்யப்பட்ட முகங்களுடன் கூடிய டீப்ஃபேக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இதுகுறித்த கவலைகளை ஏற்படுத்தின. பொதுமக்களிடம் இத்தகைய வீடியோக்கள் கோபத்தையும் தூண்டியுள்ளது.
இந்த பின்னணியில், டீப்ஃபேக்கில் தனிநபர்களை தவறாக சித்தரிப்பது போன்ற தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை பரப்புவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் குறித்து மக்களுக்கு கற்பிக்குமாறு ஊடகங்களை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
உடை மாற்றும் நடிகை கஜோல் வீடியோ: டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் அடுத்த அதிர்ச்சி!
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் ஏற்படும் இத்தகைய சவால்களை கையாள்வதில் விழிப்புணர்வின் முக்கியத்துவத்தையும் பிரதமர் மோடி அப்போது வலியுறுத்தினார். “செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்ஃபேக்கின் காரணமாக ஒரு சவால் எழுந்துள்ளது. நம் நாட்டில் பெரும்பாலானோருக்கு உண்மையை சரிபார்ப்பதில் விருப்பம் இல்லை. மக்கள் பெரும்பாலும் டீப்ஃபேக்குகளை நம்புகிறார்கள், இது ஒரு பெரிய சவால்.” என அவர் கூறினார்.
டீப் ஃபேக்கின் ஆபத்துகள் குறித்துப் பேசிய பிரதமர், தான் கர்பா நடனமாடுவது போன்ற வீடியோவைப் பார்த்ததாகவும், ஆனால் பள்ளியிலிருந்தே தான் கர்பா நடனமாடியதில்லை எனவும் சுட்டிக்காட்டினார். “சமீபத்தில் நான் கர்பா நடனமாடுவது போன்ற ஒரு வீடியோவைப் பார்த்தேன். அந்த வீடியோ அவ்வளவு நன்றாக இருந்தது என்று நான் ஆச்சரியப்பட்டேன். இதுபோன்ற பல வீடியோக்கள் ஆன்லைனில் உள்ளன. உண்மையில், நான் அது போன்று ஆடியது கிடையாது. பள்ளி பருவத்தில் கார்பாவில் நான் சிறந்து விளங்கினாலும், நான் கார்பா பாடியது, ஆடியது கிடையாது. எனவே, டீப்ஃபேக் மூலம் நான் ஆடுவது போன்று உருவாக்கப்பட்ட போலி வீடியோ அது. இதில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.” என்றார்.
டீப்ஃபேக்கின் அச்சுறுத்தல் பெரும் கவலையாக மாறியுள்ளது. நாம் அனைவருக்கும் அது நிறைய பிரச்சனைகளை உருவாக்கலாம் எனவும் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.
டீப்ஃபேக்குகள் தவறான தகவல்களை வேண்டுமென்றே பரப்புவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன அல்லது அவற்றின் பயன்பாட்டிற்குப் பின்னால் தீங்கிழைக்கும் நோக்கம் இருக்கலாம். மக்களை துன்புறுத்துவதற்கும், மிரட்டுவதற்கும், இழிவுபடுத்துவதற்கும் அவை பயன்படுத்தப்படலாம். டீப்ஃபேக்குகள் முக்கியமான பிரச்சினைகள் பற்றிய தவறான தகவல்களை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
டீப்ஃபேக்குகள் உள்ளிட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, போலி வீடியோ தயாரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஏற்கனவே அமலில் இருக்கும் சட்டங்கள் தொடர்பான அறிவுறுத்தல்களையும் மத்திய அரசு வெளியிட்டது.
மேலும், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட deep fake வீடியோக்களால் பாதிக்கப்படுபவர்கள் அருகில் உள்ள நிலையங்களில் முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்து, தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) கீழ் வழங்கப்படும் தீர்வுகளைப் பெற முடியும்.
தகவல் தொழில்நுட்ப (ஐடி) விதிகள், 2021 இன் கீழ் எந்தவொரு பயனரும் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தடுப்பது ஆன்லைன் தளங்களுக்கான சட்டப்பூர்வ கடமையாகும். எனவே, எந்தவொரு பயனர் அல்லது அரசாங்கத்தால் புகாரளிக்கப்பட்டால், தவறான தகவல் 36 மணிநேரத்தில் அகற்றப்படுவதை சமூக வலைதளங்கள் உறுதி செய்ய வேண்டும். இதற்கு இணங்கவில்லை என்றால், விதி 7, IPC விதிகளின்படி, பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்திற்கு செல்லலாம்.