பாஜகவில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்
பாஜகவில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
கடந்த 1997ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த நடிகை விஜயசாந்தி, 2005ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். அதன்பிறகு, சந்திரசேகரராவின் அப்போதைய டிஆர்எஸ் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து, 2009ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யான விஜயசாந்தி, 2014ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இதையடுத்து 2020ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில், எதிர்வரவுள்ள தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனக்கு வாய்ப்பளிக்கும் என எதிர்பார்த்திருந்து காத்திருந்த விஜயசாந்திக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், அதிருப்தியில் இருந்த அவர், நேற்றைய தினம் பாஜகவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்த இணைப்பின்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் உடனிருந்தனர்.
ஞானவாபி மசூதி: அறிக்கை சமர்பிக்க கால அவகாசம் கோரிய தொல்லியல் துறை!
மொத்தம் 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருவதற்கிடையே, காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
அதனை மெய்ப்பிக்கும் வகையில், பாஜகவில் இருந்து விலகிய பலரும் ஆளுங்கட்சியில் இணையாமல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவிய பலரும் கூட மீண்டும் காங்கிரஸ் கூடாரத்துக்கே திரும்பி வருகின்றனர். இந்த சூழலில், காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்த பின்னரும், அக்கட்சியில் நடிகை விஜயசாந்தி போன்றோர் இணைவது, அக்கட்சி ஆட்சி அமைப்பதற்கான அறிகுறிகளை காட்டுகிறது.
தெலங்கானாவில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனாவுடன் இணைந்து பாஜக தேர்தலைச் சந்திக்கிறது. அவரது ஜனசேனா கட்சிக்கு 8 தொகுதிகளை ஒதுக்கியுள்ள பாஜக, ஏற்கெனவே 100 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது.