ஞானவாபி மசூதி வழக்கில் ஆய்வு செய்யப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்க தொல்லியல் துறை கால அவகாசம் கோரியுள்ளது
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி அமைந்திருக்கும் இடம், இதற்கு முன்பு கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க, ஞானவாபி மசூதி வளாகத்தில், இந்திய தொல்லியல் துறையின், அறிவியல்பூர்வ ஆய்வுக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி (ஞானவாபி மசூதி கமிட்டி) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், தொல்லியல் ஆய்வுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது.
இதையடுத்து, ஞானவாபி மசூதி கமிட்டி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், மசூதி வளாகத்தில் தொல்லியல் ஆய்வுக்கு வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது நியாயமானது; நீதியின் நலனில் அறிவியல்பூர்வ ஆய்வு அவசியம் எனவும் தீர்ப்பளித்தது.
அரசியலமைப்பு சட்டமே ஆபத்துக்குள்ளாகி இருக்கிறது - முதல்வர் ஸ்டாலின்
அதன்படி, ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு நடைபெற்றது. ஆய்வினை முடிக்க ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, செப்டம்பர் 4ஆம் தேதி வரையும், பின்னர் அக்டோபர் 5ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு, மேலும் ஒரு மாதத்துக்கு கால அவகாசம் வழங்கிய வாரணாசி நீதிமன்றம் அதற்கு மேல் கால அவகாசம் வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
அதன் தொடர்ச்சியாக, ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வை செய்து முடித்து விட்டதாக நவம்பர் 2ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் தெரிவித்த இந்திய தொல்லியல் துறை, ஆய்வுப்பணியில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களின் விவரங்களுடன் அறிக்கையை தொகுத்து தாக்கல் செய்ய அவகாசம் கோரியது. அதனையேற்று ஆவணத்தை சமர்ப்பிக்க நவம்பர் 17ஆம் தேதி (இன்று) வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஞானவாபி மசூதி வழக்கில் ஆய்வு செய்யப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் 15 நாட்கள் அவகாசம் கோரி வாரணாசி நீதிமன்றத்தில் இந்திய தொல்லியல் துறை மனுத்தாக்கல் செய்துள்ளதாக மத்திய அரசின் வழக்கறிஞர் அமிட் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். ஆய்வில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய அறிக்கை இன்னும் வரவில்லை என்பதால் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், மேலும் 15 நாட்கள் அவகாசம் கோரி இந்திய தொல்லியல் துறை மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த கோரிக்கை மனு மீதான விசாரணை மாவட்ட நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ் முன்பு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.