மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் வாக்குப்பதிவு நிறைவு: உள்துறை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க காங்., வலியுறுத்தல்!

By Manikanda Prabu  |  First Published Nov 17, 2023, 7:39 PM IST

மத்தியப்பிரதேச மாநில உள்துறை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது


மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாகவும், மொத்தம் 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் இன்று மாலையுடன் நிறைவடைந்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 71.11 சதவீத வாக்குகளும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 67.34 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், மத்தியப்பிரதேச மாநில உள்துறை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

Tap to resize

Latest Videos

முன்னதாக இன்று காலை அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், “தேர்தலில் பாஜகவை தவிர வேறு எந்த கட்சி வெற்றி பெற்றாலும், பாகிஸ்தானில் கொண்டாட்டங்கள் நடைபெறும். தேசத்துக்கு சேவை செய்ய விரும்புபவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.” என்றார்.

அதன் தொடர்ச்சியாக, உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் வலியுறுத்தியுள்ளார். “இது ஒரு ஆத்திரமூட்டும் பேச்சு. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.” என திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

இதுபோன்று பேசுவது நரோத்தம் மிஸ்ராவின் வழக்கம் என குற்றம் சாட்டிய திக் விஜய் சிங், மிஸ்ராவுக்கு எதிரான தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், தேர்தலில் போட்டியிடவே அவருக்கு உரிமை இல்லை எனவும் கூறினார்.

என்னயவே டீப் ஃபேக் செஞ்சிட்டாங்க; ஊடகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் - பிரதமர் மோடி!

முன்னதாக தாதியாவில் செய்தியாளர்களிடம் பேசிய நரோத்தம் மிஸ்ரா, “வேறு கட்சி வெற்றி பெற்றால் பாகிஸ்தானில் கொண்டாட்டம் நடைபெறும். எனவே, தேச நலனையே முதன்மையாகக் கருதி தாமரை (பாஜகவின் தேர்தல் சின்னம்) பொத்தானை அழுத்த வேண்டும். இது எல்லையில் ராணுவத்தை பலப்படுத்தும்.” என்றார். மேலும், பாஜக சின்னத்தின் பட்டனை அழுத்தினால் இலவச ரேஷன், வீடுகள், கொரோனா தடுப்பு மருந்துகள், நாட்டில் அமைதி மற்றும் பாதுகாப்பு, வந்தே பாரத் ரயில்கள் உள்ளிட்டவை கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

மத்தியப்பிரதேச மாநிலம் தாதியா சட்டமன்றத் தொகுதியில் இருந்து நரோத்தம் மிஸ்ரா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!