மக்களவையில் இருந்து 'செங்கோலை அகற்றிவிட்டு அதற்கு பதில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வைக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி (SP) எம்பி ஆர்.கே.சௌத்ரி விடுத்துள்ள கோரிக்கை அரசியல் அரங்கில் புதிய சர்ச்சையை தூண்டி உள்ளது. இதனால் பாஜக மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களிடயே வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே சௌத்ரி, பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவியதன் மூலம் 'மன்னராட்சியை' நிறுவுவதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து பேசிய அவர் "அரசியலமைப்பு என்பது ஜனநாயகத்தின் சின்னம், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் 'செங்கோல்' நிறுவியது. செங்கோல் என்பது ராஜாக்கள் வைத்திருக்கும் கோள், அது ராஜாக்களின் முத்திரை.
மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு, நாடு சுதந்திரம் பெற்றது. நாடு செங்கோலால் ஆட்சி செய்யப்பட வேண்டுமா அல்லது அரசியலமைப்பால் நடத்தப்படுமா? அரசியலமைப்பை காப்பாற்ற பாராளுமன்றத்தில் இருந்து செங்கோலை நீக்க வேண்டும். அதற்கு பதில் அங்கு அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வைக்க வேண்டும்” என்று நான் கோரிக்கை விடுக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில், அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
ஆர்.கே சௌத்ரியின் இந்த கருத்துக்கு பாஜக மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். இந்தியா கூட்டணி தலைவர்கள் அவரின் கருத்தை ஆதரித்தாலும், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி அர்.கே சௌத்ரி தமிழ் கலாச்சாரத்தை இழிவுபடுத்தியதாக விமர்சித்து வருகிறது.
பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, இதுகுறித்து பேசிய போது "சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்றத்தில் செங்கோலை எதிர்த்தது. அதனை ராஜாவின் கோள் என்று சொல்கிறது, ஆனால் அது ராஜாவின் கோள் என்றால் ஜவஹர்லால் நேரு ஏன் செங்கோலை ஏற்றுக்கொண்டார்? இது சமாஜ்வாதி கட்சியின் மனநிலையை காட்டுகிறது. செங்கோல் என்பது இந்திய மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
செங்கோலை இழிவுபடுத்துவதை திமுக ஆதரிக்கிறதா என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். கேள்வி என்னவென்றால், பல தசாப்தங்களாக செங்கோலை வாக்கிங் ஸ்டிக்காக குறைக்கும் மனநிலை மீண்டும் சமாஜ்வாடி கட்சியின் வடிவத்தில் வந்துள்ளது. அவர்கள் இந்திய கலாச்சாரத்தை மதிக்கவில்லை. தமிழ் கலாச்சாரத்தை மதிக்கவில்லை, எனவே அவர்கள் மீண்டும் செங்கோலை இழிவுபடுத்துகிறார்கள், இது குறித்து திமுக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.
எனினும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் சவுத்ரியை ஆதரித்தார். இதுகுறித்து பேசிய அவர் "செங்கோல் நிறுவப்பட்டபோது, பிரதமர் அதன் முன் குனிந்தார். அவர் பதவிப்பிரமாணம் செய்யும் போது இதை மறந்து இருக்கலாம். ஒருவேளை எங்கள் எம்.பி.யின் கருத்து அவருக்கு அதை நினைவூட்டும் வகையில் இருக்கலாம்" என்று கூறினார்.
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் சௌத்ரியின் கோரிக்கையை ஆதரித்து மத்திய அரசை விமர்சித்தார். "இது எங்கள் கூட்டணியில் இருக்கும் சமாஜ்வாடி கட்சியின் ஒரு நல்ல ஆலோசனை" என்று கூறினார்.
இதற்கிடையில், மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் சௌத்ரியின் சர்ச்சைக்குரிய அணுகுமுறை குறித்து பேசினார். அப்போது “அவர் வளர்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டாரா அல்லது இதுபோன்ற பிளவுபடுத்தும் அரசியலில் ஈடுபடுவாரா என்று கேள்வி எழுப்பினார். பல தசாப்தங்களாக அவமரியாதை செய்யப்பட்ட செங்கோல் போன்ற சின்னங்கள் இப்போது பிரதமரால் கௌரவிக்கப்படுகிறது. எதிர்கட்சித் தலைவர்களால் ஏன் நேர்மறையான அரசியல் அணுகுமுறையை பின்பற்ற முடியவில்லை” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஆர்ஜேடி தலைவர் மனோஜ் ஜாவும் சௌத்ரியின் கோரிக்கையை ஆதரித்தார். மேலும் "பிரதமருக்கு அரசர்களின் நடத்தை உள்ளது. ஆனால் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பின் பிரதியை வைப்பது நல்லது. அது நாட்டை நல்ல முறையில் இயக்கும்," என்று அவர் கூறினார்.
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களின் கைக்கு அதிகாரம் மாறியதன் அடையாளமாக தமிழ்நாட்டை சேர்ந்த ஆதீனங்கள் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவிடம் செங்கோலை வழங்கியதாக கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு மே மாதம் புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவின் போது சபாநாயகர் நாற்காலிக்கு அடுத்தபடியாக மக்களவை அறையில் செங்கோலை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.