சபரிமலை தரிசனத்துக்கு வயது சான்றிதழ் கட்டாயம்! பெண்களுக்கு தேவஸம் போர்டு உத்தரவு!

First Published Jan 4, 2018, 5:57 PM IST
Highlights
Sabarimala darshanam age certification is mandatory! Devasam board orders for women


சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பெண்கள், தகுந்த வயது சான்றுக்கான அடையாளத்தை கொண்டு வர வேண்டும் என்று தேவசம்போர்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், வயது சான்றுக்காக ஆதார் அட்டையைக்கூட காட்டலாம் என்றும் அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 41 நாள் கடும் விரதம் இருந்து இருமுடி சுமந்துவரும் ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பெண்களில் 10 வயது முதல் 50 வயதுக்குட்டப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த கட்டுப்பாடு பல நூறு வருடங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது. 

தற்போது இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற விசாரணையின்போது, 10 முதல் 50 வரையிலான பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் என்பதால் விரதத்தின் புனிதத்தை அந்த வயது பெண்களால் காக்க முடியாது என்றும், சபரிமலை ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சரிய தவத்தில் உள்ளதாலும் அந்த வயது பெண்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்படுவதில்லை என்றும் தேவஸம்போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பெண்கள் இனி தகுந்த வயது சான்று கொண்டு வர வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவை தேவசம்போர்டு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக திருவனந்தபுரம் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், சபரிமலை வரும பெண்கள் இனி தகுந்த வயது சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. வயது சான்றுக்கான அடையாளமாக ஆதார் அட்டையைக்கூட காட்டலாம் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!