
அமெரிக்கா அளிக்கும் பல்வேறு நெருக்கடிகளை வெற்றிகரமாக முறியடித்து, செயல்பட்டு வருகிறது வடகொரியா என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கோழிக்கோடு நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுக்கூட்டம் செவ்வாய்கிழமை நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது-
பாராட்டு
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்காவுக்கு எதிரான தீவிரமான கொள்கைகளை பின்பற்றி வருகிறார். இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க கொடுத்து வந்த பல்வேறு நெருக்கடிகளையும் வெற்றிகரமாக சமாளித்துள்ளார். இந்த வகையில் சீனாவைக் காட்டிலும் வட கொரியாகசிறப்பாகவே செயல்படுகிறது.
செயல்படவில்லை
சீனாவைப் பொருத்தவரை ஏகாதிபத்திய, முதலாளித்துவ சக்திகளுக்கு எதிராக போராடினாலும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக செயல்படவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வடகொரியா நாட்டுக்கு ஆதரவாக தென் மாநிலங்களில் உள்ள எந்த முதல்வரும் பேசாத நிலையில், முதல் முறையாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவிப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பதாகையில் வடகொரியா
கடந்த டிசம்பர் மாதம் நெடுங்கண்டனம் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பதாகை ஒன்றில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் புகைப்படம் இடம் பெற்று இருந்தது. கட்சித் தொண்டர்களை வரவேற்று அவர் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா-வடகொரியா மோதல்
வடகொரியா நாடு தொடர்ந்து அணு ஆயுத சோதனைகள் நடத்தி வருவதால், அந்த நாட்டுக்கு ஐ.நா. பாதுகாப்புகவுன்சிலும், அமெரிக்காவும் பல்வேறு பொருளாதார தடைகள் விதித்துள்ளன.
இருந்தபோதிலும், தொடர்ந்து வடகொரியா கொரிய பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. புத்தாண்டு தினத்தன்று பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்காவை தாக்கி அழிக்கும் அணு ஆயுத ஏவுகணை கட்டுப்பாட்டு பொத்தான் தனது மேஜையின் மீது இருக்கிறது என்று மிரட்டல் விடுத்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த அறிக்கையில், வடகொரியாவைக் காட்டிலும் மிகப்பெரிய அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் பொத்தான் தனது மேஜையின் மீதும் இருக்கிறது என்று பேசினார்.