
பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய நடவடிக்கைகளால், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் நீடிப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் இடையே நீடிக்கும் பதற்றம் காரணமாக பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவதை இந்தியா நிறுத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம், இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல்களை நடத்திவருகிறது. இதுதொடர்பாக பலமுறை இந்தியா எச்சரித்தும் அதை சற்றும் பொருட்படுத்தாத பாகிஸ்தான் ராணுவம், இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் மட்டுமல்லாது, தீவிரவாதிகளும் இந்திய எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்துகின்றனர். பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்கள், துணை ராணுவப்படையினர் என பலர் இறந்துள்ளனர். இந்தியா சார்பில் எச்சரிக்கை விடுத்தும் பலனில்லை.
பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதற்கு எதிராகவும் உலகநாடுகளை ஒன்றுதிரட்டும் பணியை பிரதமர் மோடி மேற்கொண்டுவருகிறார். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்துமாறு பாகிஸ்தானை எச்சரித்துள்ளன. ஆனாலும் பாகிஸ்தான் நிறுத்தியபாடில்லை.
இந்திய எல்லைப்பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவமும் தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்துவதால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் பதற்றம் நீடிக்கிறது. எனவே பாகிஸ்தானுக்கு இந்தியாவோ இந்தியாவிற்கு பாகிஸ்தானோ சென்று கிரிக்கெட் விளையாட மத்திய அரசு தடை விதித்துள்ளது.
உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடுவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால், இருநாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போதும் பாகிஸ்தானின் தாக்குதல் தொடர்ந்து வருவதால், இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற வாய்ப்பில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஆலோசனை கூட்டத்தில், வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்த அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தானின் அத்துமீறிய செயல்களால், இருநாடுகளுக்கும் பொதுவான இடங்களில் கூட கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.