மக்களவைத் தேர்தல் 2024இன் முதற்கட்ட தேர்தலில் நாடு முழுவதும் போட்டியிடும் வேட்பாளர்களில் பணக்கார வேட்பாளர்கள் விவரம் தெரியவந்துள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. இறுதி மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும், நாடு முழுவதும் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடத்தப்படவுள்ளது.
இதனிடையே, முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அடுத்தக்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முதற்கட்ட தேர்தலில் நாடு முழுவதும் போட்டியிடும் வேட்பாளர்களில் யார் பணக்கார வேட்பாளர் என்ற விவரம் தெரியவந்துள்ளது.
கச்சத்தீவை தாரைவார்த்தது காங்கிரஸ், திமுக: வேலூர் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
அதன்படி, மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகனும், சிந்த்வாரா மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் சிட்டிங் எம்.பி.யுமான நகுல் நாத் ரூ.717 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் ரூ.662 கோடி சொத்து மதிப்புடன் ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், மூன்றாவது இடத்தில் ரூ.304 கோடி சொத்து மதிப்புடன் சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ் ஆகியோரும் உள்ளனர்.
நாடு முழுவதும் முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் பணக்கார வேட்பாளர்களின் முதல் 10 பேர் கொண்ட பட்டியலில், தமிழ்நாட்டின் வேலூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 6ஆவது இடத்திலும் (ரூ.152 கோடி), கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் 7ஆவது இடத்திலும் (ரூ.135 கோடி), சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 10ஆவது இடத்திலும் (ரூ.96 கோடி) உள்ளனர்.