அவதூறு வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்குப் பின் மீண்டும் எம்.பி. ஆகியிருக்கும் ராகுல் காந்தி தனது சொந்தத் தொகுதியான வயநாடுக்குச் செல்லும் முன் இன்று தமிழ்நாட்டுக்கு வருகிறார்.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் அண்மையில் இடைக்காலத் தடை விதித்தது. இதனால் மீண்டும் எம்.பி.யான ராகுல் காந்தி இன்று கேரளாவில் உள்ள தனது சொந்தத் தொகுதியான வயநாடு தொகுதிக்குச் செல்கிறார்.
கேரளா செல்வதற்கு முன் தமிழகத்திற்கு வரும் அவர் ஊட்டி சென்று பல்வேறு சந்திப்புகளில் ஈடுபடுகிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்த அவர், காரில் சுமார் 11 மணி அளவில் ஊட்டி செல்கிறார்.
நாங்குநேரி சம்பவம் நெஞ்சைப் பதறச்செய்கிறது... டிடிவி தினகரன் தமிழக அரசிடம் கோரிக்கை
எல்லநல்லி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கும் அவர் முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்து பேசுகிறார். அதே விடுதியில் ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பைப் பார்வையிடுகிறார். மதிய உணவுக்குப் பின் 1 மணியளவில் முத்தநாடுமந்து தோடர் பழங்குடி கிராமத்திற்குச் சென்று மக்களிடம் கலந்துரையாட உள்ளார். அவர்களது கோவிலுக்கும் சென்று பார்வையிட இருக்கிறார்.
பின், கூடலூர் வழியாக வயநாடு செல்லும் வழியில் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கும் ராகுல்காந்தி செல்ல உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்ததும், அந்தப் படத்தில் தோன்றிய பொம்மன் - பெள்ளி பாகன் தம்பதியைம்ப் பார்க்க பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இருவரும் வருகை தந்தனர். யானைகள் முகாமுக்கும் சென்று பார்வையிட்டனர்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் தெப்பக்காடு யானைகள் முகாமுக்குச் செல்ல வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு அவர் தங்கும் தனியார் விடுதியிலும், முத்தநாடுமந்து கிராமத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.