
2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2016 நவம்பர் 8 ஆம் தேதி பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. மேலும் செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் திருப்பி ஒப்படைக்கும்படி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். மேலும் பழைய நோட்டுகளுக்குப் பதிலாக புதிய வடிவிலான 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்துக்கு விடப்பட்டன. அதை தொடர்ந்து 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: வந்தே பாரத் ரயிலில் முதல் பெண் ஓட்டுநர் சுரேகா யாதவ்
இதனிடையே கருப்புப்பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்துவிட்டு அதை விட அதிக மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்துள்ளது அனைவர் மத்தியிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதற்கு ஏற்றார் போல் பதுக்கல் வழக்குகளில் கைப்பற்றப்படும் நோட்டுகளும் 2000 ரூபாய் நோட்டுகளாக சிக்கின. இதை அடுத்து அந்த நோட்டை அச்சிடுவதை நிறுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை நிறுத்திவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் தொடர்ந்து சரியும் வங்கிகள்; மூன்றாவது வங்கியாக சிக்னேச்சர் வங்கி திவால்!!
மக்களவையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சரான அனுராக் சிங் தாகூர், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நோட்டுகள் அச்சிடப்படவே இல்லை. 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியை 2019ம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. இப்போது புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளே போதுமானது என மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய ரூ.2000 நோட்டுகளை அச்சிடும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று தெரிவித்துள்ளார்.