உலகின் மிகவும் மாசுபட்ட 50 நகரங்களில் 39 இந்தியாவில் உள்ளவை: ஆய்வில் தகவல்

By SG BalanFirst Published Mar 14, 2023, 2:44 PM IST
Highlights

131 நாடுகளின் தரவுகளைக் கொண்டு நடைபெற்ற ஆய்வின்படி, உலகில் மாசுபாடு அதிகம் நிலவும் 50 நகரங்களில் 39 நகரங்கள் இந்தியாவில் உள்ளவை என்று தெரியவந்துள்ளது.

2022 இல் இந்தியா உலகின் எட்டாவது மிகவும் மாசுபட்ட நாடாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் ஐந்தாவது இடத்தில் இருந்தது. PM 2.5 அளவு 53.3 மைக்ரோகிராம் / கியூபிக் மீட்டராக குறைந்திருந்தாலும், அது உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பான வரம்பை விட 10 மடங்கு அதிகமாகும்.

சுவிஸ் நிறுவனமான IQAir செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உலக காற்று தர அறிக்கை காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் தரவரிசையும் இடம்பெற்றுள்ளது. 131 நாடுகளின் அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்களின் தரவுகளைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாசுபட்ட நகரங்களின் தரவரிசைப் பட்டியலில் 7,300 க்கும் மேற்பட்ட நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் இந்திய நகரங்கள் அதிக அளவில் உள்ளன. பல இந்திய நகரங்கள் 2017ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பட்டியலில் உள்ளன. 2017ஆம் ஆண்டில் இந்தப் பட்டியலில் 2,200 க்கும் குறைவான நகரங்களே இருந்த நிலையில் இப்போது அந்த எண்ணிக்கை மூன்று மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது.

Oscar 2023 Gift Bag: ஆஸ்கர் விருது பட்டியலில் இருந்தவர்களுக்கும் எக்கச்சக்க பரிசுகள்! என்னென்ன தெரியுமா?

இந்தியாவில் காற்று மாசுபாட்டினால் 150 பில்லியன் டாலர்கள் செலவாகிறது என்றும் போக்குவரத்துத் துறையால் 20 முதல் 35 சதவீதம் மாசுபாடு ஏற்படுகிறது என்றும் அறிக்கை கூறுகிறது. தொழில்துறை, நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் போன்றவை மாசுபாட்டிற்கான பிற முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

பாகிஸ்தானில் உள்ள லாகூர், சீனாவில் உள்ள ஹோட்டான் ஆகிய நகரங்கள் அதிகம் மாசுபட்ட முதல் இரண்டு நகரங்களாக உள்ளன. அதைத் தொடர்ந்து இந்திய நகரங்களான பிவாடி (ராஜஸ்தான்), டெல்லி ஆகியவை உள்ளன. டெல்லியில் காற்று மாசுபாடு 92.6 மைக்ரோகிராம் அளவுக்கு உள்ளது. இது பாதுகாப்பான வரம்பைவிட கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகம் ஆகும்.

மெட்ரோ நகரங்களில் டெல்லிக்கு அடுத்தபடியாக கொல்கத்தா தான் அதிகமாக மாசுபட்டுள்ளது. ஆனால் இரு நகரங்களுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. சென்னையில் காற்று மாசுபாடு உலக சுகாதார அமைப்பின் நிர்ணயித்த பாதுகாப்பான அளவை விட 5 மடங்கு அதிகம். என்றாலும் டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது சென்னையின் நிலை நற்று மேலானதாக உள்ளது. ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய மெட்ரோ நகரங்களில் 2017 முதல் சராசரி காற்று மாசின் அளவு கூடிக்கொண்டே வந்திருக்கிறது.

Karnataka Wildfire: சிக்கமகளூருவில் விஷமிகளால் தூண்டப்பட்ட காட்டுத் தீயில் 250 ஏக்கர் வனப்பகுதி நாசம்

click me!