
கர்நாடக மாநிலம், பெங்களூரு மாவட்டம் சிக்கமதுரேயில் ஶ்ரீ சனி மகாத்மா கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள சனீஸ்வர பகவானுக்கு ரோஜா மாலையோடு இறைச்சியையும் சேர்த்து கட்டிக்கொண்டு வந்த இருவரை கடந்த சனிக்கிழமை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள், ஹொஸ்கோட் அருகே உள்ள கம்பலள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜு, வயது 30, பெங்களூரு ஒயிட் பீல்ட்டில் வசிக்கும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் சோமசேகர் வயது 45 என்பதும் தெரியவந்தது.
சம்பவ தினத்தன்று, கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, இருவரும் மாலையுடன் கோவிலுக்கு வந்துள்ளனர். அப்போது, பாதுகாவலர்கள் அவர்களை நிறுத்தி சோதனையிட்டபோது கையில் இருந்த மாலையில் இறைச்சி துண்டுகளும் சேர்ந்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பந்தயத்தில் ஒப்புக்கொண்டதன் பேரில் மாலையை கொண்டு வந்ததாக இருவரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே கடந்த மாதம் 22ம் தேதி இதேபோல் ஒரு இறைச்சி மாலையை சாமிக்கு சாற்ற வந்துள்ளனர். அப்போது பூசாரி அங்கு இல்லாததால் அவர்கள் மாலையை அங்கேயே வைத்துவிட்டு சென்றுவிட்டனர். அப்போது தப்பித்த இருவரும் இந்த முறையும் அதே செயலை மேற்கொண்ட போது மாட்டிக்கொண்டனர்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்றொரு நபர் தலைமறைவாகியுள்ளார். அந்த நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
நடுவானில் உயிரிழந்த நைஜீரியா பயணி... அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!!