
2 நாள் பயணமாக இன்று இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, கொழுப்பில் நடைபெறவுள்ள புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் பங்கேற்பதோடு கண்டி பகுதியில் இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள திக்கோயா என்ற மருத்துமனையையும் திறந்து வைக்கிறார்.
புத்தரின் பிறந்தநாள், ஞானோதயம் பெற்ற நாள், உயிர் நீத்த நாள் ஆகிய மூன்றையும் புத்த பூர்ணிமா தினம் என்ற பெயரில் புத்தமதத்தினர் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள இந்த புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் நாளை முதல் வரும் 14 ஆம் தேதி வரி 3 நாட்கள் நடைபெறவுள்ளன.
இந்த கொண்டாட்டங்களில் உலகம் முழுவதும் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். புத்த பூர்ணிமா திருவிழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்பதற்காக மோடி இன்று கொழும்பு நகருக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
மோடி தனது பயணத்தின்போது, தேயிலைக்கு புகழ்பெற்ற இலங்கையின் மத்திய மாகாணமான கண்டிக்கும் செல்கிறார். தோட்ட தொழிலாளர்களுக்காக இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள திக்கோயா மருத்துவமனையையும் மோடி திறந்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து தமிழர் முன்னேற்ற கூட்டணியின் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார்.
மோடியின் இந்த சுற்றுப்பயணத்தின்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து விரிவாக பேசுகிறார்.
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
இதனிடையே இலங்கை அரசின் புத்த பூர்ணிமா கொண்டாட்டத்துக்கும், அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதற்கும் இலங்கை தமிழர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.