1.32 லட்சம் கிராம மக்களுக்கு சொத்து அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி..!

By karthikeyan VFirst Published Oct 11, 2020, 1:05 PM IST
Highlights

மத்திய அரசின் ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு சொத்து அட்டைகள் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
 

கிராமவாசிகளிடம் தங்கள் வீடுகளின் சட்ட ஆவணங்கள் எதுவும் இல்லாததால், வங்கிகளில் அவர்களால் கடன் பெற முடியவில்லை. இதையடுத்து கிராம பஞ்சாயத்துகளின் எல்லைக்குள் வரும் குடியிருப்பு சொத்துக்களின் உரிமையை வழங்குவதற்கான திட்டத்தை தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான ஏப்ரல் மாதம் 24-ம் தேதி, ஸ்வமித்வா என்ற திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். 

இத்திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் சொத்து வைத்திருப்பவர்களுக்கு, சொத்து அட்டை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஒருவரை குறிப்பிட்ட சொத்தின் உரிமையாளர் என அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த சொத்து அட்டைகளை பயன்படுத்தி, கிராம மக்கள் வங்கிகளில் கடன் வசதிகளை பெறலாம்.

இந்த திட்டத்தின் முதற்கட்டமாக, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள 763 கிராமங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 32 ஆயிரம் மக்களுக்கு சொத்து அட்டைகளை வழங்கும் திட்டத்தை இன்று பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

இந்த ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி தொடங்கிவைக்கப்பட்ட இந்த திட்டத்தின், முதற்கட்டமாக இன்று ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த கட்டமாக 2024 மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் இருக்கும் 6.2 லட்சம் கிராமங்களில் சொத்து வைத்திருக்கும் அனைவருக்கும் சொத்து அட்டைகள் வழங்கப்படவுள்ளது.
 

click me!