டிஆர்பி மோசடி வழக்கு: மகாராஷ்டிரா அரசு, மும்பை போலீஸின் சூனிய வேட்டை.. ரிபப்ளிக் சேனல் கடும் தாக்கு

By karthikeyan VFirst Published Oct 10, 2020, 2:21 PM IST
Highlights

தங்களுக்கு எதிராக மும்பை காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட டிஆர்பி மோசடி வழக்கு, பழிவாங்கும் நடவடிக்கையில் பதிவு செய்யப்பட்ட பொய்யான வழக்கு என விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது ரிபப்ளிக் மீடியா நெட்வொர்க்.
 

விளம்பர வருவாயை அதிகரிக்க டிஆர்பி ரேட்டிங்கை போலியாக அதிகரித்து காட்டி மோசடி செய்ததாக ரிபப்ளிக் டிவி மற்றும் 2 மராத்தி சேனல்கள் உட்பட 3 சேனல்கள் மீது மும்பை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. வீடுகளுக்கு வழங்கப்படும் செட் அப் பாக்ஸ்களில் தங்களது சேனல்களை பார்ப்பது போல் காட்டி டிஆர்பி மோசடியில் ஈடுபட்டதாக மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதே விஷயத்தை மும்பை காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங்கும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மும்பை காவல்துறையும் மகாராஷ்டிர அரசும் இணைந்து, ரிபப்ளிக் மீடியா நெட்வொர்க்கை பழிவாங்கும் எண்ணத்தில் ஆதாரமற்ற பொய்யான வழக்கை பதிவு செய்திருப்பதாக ரிபப்ளிக் மீடியா நெட்வொர்க் தரப்பில் விளக்கமளித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் மீடியா நெட்வொர்க் வெளியிட்ட அறிக்கை:

ரிபப்ளிக் மீடியா நெட்வொர்க், இந்தியாவின் மிகப்பெரிய நியூஸ் நெட்வொர்க். ஆங்கில சேனல், இந்தி சேனல் மற்றும் இணையதளம் ஆகிய அனைத்திற்கும் சேர்த்து மொத்தம் 25 கோடி(250 மில்லியன்) பார்வையாளர்களை கொண்ட சேனல். சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு மற்றும் பல்காரில் சாதுக்களை கொலை செய்த வழக்கு ஆகிய இரண்டு வழக்குகளிலும் மகாராஷ்டிரா அரசின் செயல்பாடுகளை சாடினோம். இதையடுத்து ரிபப்ளிக் மீடியா நெட்வொர்க்கிற்கு எதிராக மகாராஷ்டிரா அரசும், மும்பை காவல்துறையும் சதித்திட்டத்தில் ஈடுபட்டு, எந்தவித முன்விசாரணையும் செய்யாமல், ரிபப்ளிக்கிற்கு எதிராக பொய்யான வழக்கை பதிவு செய்துள்ளது.

இந்தியா டுடேவிற்கு எதிராக டிஆர்பி மோசடி வழக்கு தெரியவரவே, உடனடியாக மும்பை கூடுதல் ஆணையர் இந்தியா டுடே சேனலிலேயே, அந்த சேனலுக்கு எதிராக எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று விளக்கமளித்தார். ஆனால் அதற்கான ஆதாரங்கள் இதோ..

1. டிஆர்பி மோசடியில் கடுமையான குற்றச்சாட்டுகளை குறிப்பிடும் எஃப்.ஐ.ஆர், இந்தியா டுடேவை ஆறு முறை பெயரிட்டுள்ளது.

2. இந்த வழக்கை பதிவு செய்த ஹன்சா ரிசர்ச் க்ரூப் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் Relationship மேனேஜர் விஷால் பண்டாரி, இந்தியா டுடே சேனலை பார்க்க வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் இந்த வழக்கின் முக்கியமான சாட்சி.

3. ரேட்டிங் ஏஜென்ஸி BARC, இந்தியா டுடே டிஆர்பி மோசடியில் கையும் களவுமாக பிடித்துள்ளது. பார்வையாளர்களை அதிகமாக காட்டி முறைகேட்டில் ஈடுபட்ட இந்தியா டுடேவிற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது BARC.

4. நீதிபதி முகுல் மத்கல் தலைமையிலான BARC-ன் ஒழுக்க நெறிமுறை கமிட்டி, இந்தியா டுடே, டிஆர்பி மோசடியில் ஈடுபட்டதை அம்பலப்படுத்தியது. 

மும்பை காவல்துறை ஆணையர் பரம் பிர் சிங், டிஆர்பி மோசடி வழக்கிலிருந்து இந்தியா டுடே சேனலை காப்பாற்ற ஓவர்டைம் வேலை பார்க்கிறார். ஆனால் இன்று ஒட்டுமொத்த தேசமும், இந்தியா டுடேவின் டிஆர்பி மோசடியை உற்றுநோக்கி கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா அரசில், அமைச்சராக இருக்கும் அனில் பரப் மற்றும் சிவசேனா மூத்த தலைவர் சுனில் ராவட் ஆகிய இருவரும் ரிபப்ளிக் மீடியா நெட்வொர்க்கை வெளிப்படையாக மிரட்டியதற்கான ஆதாரம் உள்ளது.

ரிபப்ளிக் மீடியா நெட்வொர்க் சேனல்களை ஒளிபரப்பக்கூடாது என்று கேபிள் விநியோகஸ்தர்களை மகாராஷ்டிரா அரசும், சிவசேனாவும் மிரட்டின. மகாராஷ்டிரா அரசு மற்றும் சிவசேனாவின் சூனிய வேட்டையின் நீட்சி தான், ரிபப்ளிக் டிவி மீது மும்பை காவல்துறை ஆணையர் எடுக்கும் நடவடிக்கை.

இந்த வன்மச்செயலுக்கு எதிராக ரிபப்ளிக் மீடியா நெட்வொர்க் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. எங்களது சட்ட நடவடிக்கை குறித்த அறிக்கைகளை மகாராஷ்டிரா அரசிடமும் சமர்ப்பித்துள்ளோம். சட்டப்படி செயல்பட்டு, எங்களுக்கு எதிரான கோரமான சூனிய வேட்டைக்கு கண்டிப்பாக சட்ட ரீதியான தீர்வை பெறுவதில் உறுதியாக உள்ளோம்.

மகாராஷ்டிரா அரசு மற்றும் மும்பை காவல்துறை ஆகியவற்றின் பாதுகாப்பு வளையத்தில் செயல்படும் இந்தியா டுடே போன்ற செய்தி சேனல்கள், எதிர்காலத்தில் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்டால், நமக்கும் இது நடக்கும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும் என்று ரிபப்ளிக் டிவி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!