லட்சக்கணக்கான கிராமப்புற மக்களுக்கான வரப்பிரசாத திட்டம்..! வரும் 11ம் தேதி தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி

By karthikeyan VFirst Published Oct 9, 2020, 5:10 PM IST
Highlights

கிராமப்புற மக்களுக்கான வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 11ம் தேதி காணொலி மூலம் தொடங்கிவைக்கிறார். கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு சொத்துக்களுக்கு உரிமை வழங்கும் திட்டத்தை 11ம் தேதி பிரதமர் தொடங்கிவைக்கிறார்.
 

கிராமவாசிகளிடம் தங்கள் வீடுகளின் சட்ட ஆவணங்கள் எதுவும் இல்லாததால், வங்கிகளில் அவர்களால் கடன் பெற முடியவில்லை. இதையடுத்து கிராம பஞ்சாயத்துகளின் எல்லைக்குள் வரும் குடியிருப்பு சொத்துக்களின் உரிமையை வழங்குவதற்கான திட்டத்தை கடந்த ஏப்ரல் 24ம் தேதி பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். 

கிராமப்புற வீடுகளின் டிஜிட்டல் கணக்கெடுப்பு கர்நாடகா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடந்தது. பஞ்சாயத்துகளின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்காக ஈ-அமைப்பைப் பின்பற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

கிராம மக்களுக்கான புரட்சிகரமான இந்த திட்டத்தை வரும் 11ம் தேதி பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார். ஒரு லட்சம் பேர், அவர்களது வீட்டிற்கான உரிமை அட்டையை மொபைல் எஸ்.எம்.எஸ்-ல் டவுன்லோடு செய்துகொள்ளலாம். பின்னர் அந்தந்த மாநில அரசாங்கத்தால் அதற்கான அச்சு நகல் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் 6 மாநிலங்களை சேர்ந்த 763 கிராமங்களின் மக்கள் பயன்பெறுவார்கள். உத்தர பிரதேசத்தின் 346 கிராமங்கள், ஹரியானாவின் 221 கிராமங்கள், மகாராஷ்டிராவின் 100 கிராமங்கள், உத்தரகண்டில் 50 கிராமங்கள் மத்திய பிரதேசத்தில் 44, கர்நாடகாவில் 2 என மொத்தம் 763 கிராமங்களை சேர்ந்த ஒரு லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தின் மூலம் ஒரே நாளில் வீட்டிற்கான உரிமை அட்டையை பெற்றுவிடமுடியும். 

இதன்மூலம் கிராம மக்கள் தங்கள் வீடுகளின் மூலம் நிதி ஆதாரத்தை, வங்கிக்கடனாகவும் மற்ற வழிகளிலும் பெற முடியும். மேலும், லட்சக்கணக்கான கிராமப்புற சொத்து உரிமையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் மிக நவீன தொழில்நுட்ப வழிமுறைகளை உள்ளடக்கிய இவ்வளவு பெரிய அளவிலான பயிற்சி மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை.

கிராமப்புற மக்களுக்கான இந்த கனவுத்திட்டத்தை வரும் 11ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கிவைத்து, பயனாளர்கள் சிலரிடம் கலந்துரையாடவுள்ளார் பிரதமர் மோடி.
 

click me!