அக்டோபர் 15 முதல் பள்ளிகள் திறப்பு... நெறிமுறைகளை வெளியிட்டு மத்திய அரசு அதிரடி..!

By Asianet TamilFirst Published Oct 5, 2020, 9:22 PM IST
Highlights

அக்டோபர் 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
 

கொரோனா ஊரடங்கு மார்ச் 24-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. அப்போது முதலே பள்ளிகள் செயல்படவில்லை. ஜூன் மாதம் முதல் பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடைபெற்றுவருகின்றன. தற்போது நாடு முழுவதும் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக பள்ளிகள் திறக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அக்டோபர் 15 முதல் பள்ளிகள், பயிற்சி மையங்களைத் திறப்பது குறித்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது.


இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்த முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அந்த வழிகாட்டுதல்கள் வருமாறு:
* மாணவர்கள் பெற்றோர் ஒப்புதல் கடிதத்துடன் மட்டுமே பள்ளிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
* மாணவர் வருகைப் பதிவேட்டில் கடுமை காட்டப்படாது. 
* தங்களுக்குத் தேவையெனில் ஆன்லைன் வகுப்புகளை மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
* வகுப்பறைகள், கழிப்பறைகள், பள்ளி வளாகம், உபகரணங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
* பள்ளியில் தனிமனித இடைவெளி மிகவும் அவசியம்.


* பள்ளியில் எந்நேரமும் முகக்கவசம் அணிய வேண்டும்.
* முன்னெச்சரிக்கை, தனிமனித இடைவெளி குறித்த தகவல் பலகைகள், பேனர்களை பள்ளிகளில் வைக்க வேண்டும்.
* பள்ளிகளில் அவசரகால உதவிக் குழு, சுகாதாரப் பரிசோதனைக் குழுக்கள் உருவாக்க வேண்டும்.
* பள்ளிக் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கும் வகையில், சூடாகச் சமைக்கப்பட்ட மதிய உணவு அல்லது அதற்கு ஈடான ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.
* பள்ளியில் யாருக்காவது கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழிகாட்டுதல் நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

click me!