
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் தூங்கும் போது, கொத்தனாராகத் தூங்கி, எழுந்தபோது லட்சாதிபதியாக கண்விழித்துள்ளார். முதல்நாள் இரவு அவர் வங்கிக்கணக்கில் ரூ. 7 ஆயிரம் இருந்த நிலையில், மறுநாள் காலை ஏ.டி.எம். பணம் எடுக்கச் சென்ற போது, ரூ. 62 லட்சம் இருந்தது கண்டு அதிர்ந்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், பிரதாப்கார்க் மாவட்டம், சரய் ஹரி நாராயன் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய் குமார் படேல். இவர் கொத்தானார் கடந்த 15 ஆண்டுகளாக மும்பையில் பணியாற்றி வருகிறார். தீபாவளிப் பண்டிகையையொட்டி விடுமுறைக்காக மும்பையில் இருந்து அவரின் சொந்த கிராமத்துக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன் தினம்(ஞாயிற்றுக்கிழமை) இரவு அஜய் குமார் தனது வங்கிக்கணக்கில் இருந்து ஏ.டி.எம். மூலம் பணம் எடுத்து விட்டு, கணக்கை பார்த்துள்ளார். அப்போது, அதில் ரூ.7 ஆயிரத்து 528 மட்டுமே இருந்தது.
இந்நிலையில், காலையில் எழுந்து அவரின் செல்போனில் வந்துள்ள ‘மெசேஜ்’ பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதில், ரூ. 62 லட்சம் டெபாசிட்செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து அஜய் குமார் படேல் நிருபர்களிடம் கூறுகையில், “ தீபாவளி விடுமுறை முடிந்து மும்பைக்கு வேலை செல்லலாம் என்று இருந்தேன். என் கணக்கில் இருந்து பணம் எடுத்து டிக்கெட் வாங்கலாம் என்று ஏ.டி.எம். சோதனையிட்ட போது, என் கணக்கில் ரூ. 62 லட்சம் இருப்பதாக ஏ.டி.எம். எந்திரம் தெரிவித்தது. அதன்பின்தான் என் செல்போனில் வந்த செய்தியை ஆழமாகப் படித்தேன். அதில், என்கணக்கில் உள்ள ரூ. 62 லட்சம் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், யார் டெபாசிட் செய்தது என தெரியவில்லை. பணம் எடுத்தால், ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை.
அதன்பின், கிராமத்தலைவர் சாஞ்சல் சிங்கிடம் ரூ. 200 வாங்கி டிக்கெட் எடுத்தேன். மேலும், வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நீங்கள் உடனடியாக மும்பையில் உள்ள நலாஸ்போரா வங்கிக்கிளைக்கு வர வேண்டும். உங்கள் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது குறித்து விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
ஆனால், நானோ, உத்தரப்பிரதேசத்தில் உள்ள எனது சொந்த ஊரில் இருக்கிறேன் என்றேன். அப்படியானால், நீங்கள் சொந்த கிராமத்தில் இருக்கிறேன் என்பதற்கு ஆதாரமாக, கிராமபஞ்சாயத்து தலைவரிடம் ஒரு கடிதம் பெற்றுக்கொண்டு வங்கிக்கு வாருங்கள் என்று தெரிவித்தனர்.
அதன்பின், வங்கி மேலாளரிடம் பணம் என்னுடையது இல்லை. யார் டெபாசிட் செய்தார்கள் என்றும் எனக்குத் தெரியாது. அரசு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். பணம் என்னுடையது இல்லை என்று தெரிவித்தேன். அதன்பின், கிராமத் தலைவரிடம் கடிதம் பெற்று மின் அஞ்சலில் வங்கிக்கு அனுப்பி இருக்கிறேன்'' என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் செல்லாத அறிவிப்பு வந்தபின், நம்முடைய வங்கிக்கணக்கில் திடீரென்று யாரேனும் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் டெபாசிட் செய்யலாம்.எப்போதும் கவனமாக இருக்கவும்…