
மத்திய அரசு கடந்த 8ம் தேதி இரவு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்தது. இதைதொடர்ந்து பொதுமக்கள், தங்களது கையில் உள்ள பணத்தை வங்கிகளில் செலுத்தி மாற்றி கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கருப்பு பணம் வைத்திருக்கும் சிலர், பொதுமக்களை பயன்படுத்தி, அவர்களது வங்கியில் பண மாற்றம் செய்ய வருபவர்களை வைத்து, கருப்பு பணத்தை போடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஒரே நபர், மீண்டும் மீண்டும் பணம் மாற்றுவதற்காக வங்கிக்கு செல்வதாக புகார் எழுந்தது.
இதையடுத்து மத்திய அரசு, பண மாற்றம் செய்யவரும் மக்களின் விரல்களில் மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், மத்திய அரசு அறிவித்த வங்கியில் ‘மை’ வைக்கும் திட்டத்தை இன்று அனைத்து வங்கிகளிலும் அறிமுகப்படுத்தியது. இதையொட்டி, வங்கிகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருவோருக்கு விரலில் மை வைக்கப்பட்டு வருகிறது.
டெல்லியில் உள்ள வங்கியில் மை வைக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பணம் மாற்ற வருவோரின் இடது கை ஆள்காட்டி விரலில் ‘மை’ வைக்கப்படுகிறது.