
மகாராஷ்டிரா மாநில வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தனியார் உரம், பூச்சிகொல்லி, விதை நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து மழை பெய்யும் எனக்கூறி ஏமாற்றிவிட்டனர். அவர்களின் வார்த்தைகளை நம்பி, கோடிக்கணக்கான பணத்தை இழந்துவிட்டோம் எனக்கூறி விவசாயிகள் போலீசில் புகார் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பூனா மற்றும் கொலாபா வானிலை ஆய்வு மையங்கள் நடப்பு கரீப் பருவமான ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நல்ல மழை பெய்யும் என அறிவித்திருந்தன.
இதையடுத்து அம்மாநில விவசாயிகள் தனியார் கம்பெனிகளிடம் இருந்து விதைகள், உரம், பூச்சி மருந்து வாங்கி பயிரிட்டனர். ஆனால் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததைப் போல ஜூன் ,ஜூலை மாதங்களில் போதுமான மழை பெய்யவில்லை.
இதனால் பயிர்களை விதைத்த ஏராளமான விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு கடன் சுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து மராத்வாடா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் , விவசாயத்தில் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதற்கு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள்தான் காரணம் எனக்கூறி போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர்.
விவசாயிகளின் புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் இது பற்றி விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை இந்த புகார் குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் உரிய விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.