மணிப்பூரை விட இஸ்ரேல் மீது பிரதமர் மோடி அதிக அக்கறை காட்டுவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்
மிசோரம் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 7ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநில தேர்தல் பிரசாரத்துக்காக இரண்டு நாள் பயணமாக ராகுல் காந்தி அங்கு சென்றுள்ளார். ஐஸ்வாலில் உள்ள சன்மாரியில் இருந்து கருவூல சதுக்கம் வரை 2 கிலோமீட்டர் தூர பேரணியில் கலந்து கொண்ட அவர், மணிப்பூர் மாநில ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற கூட்டத்தில் பேசிய போது, மணிப்பூரை விட இஸ்ரேல் மீது பிரதமர் மோடி அதிக அக்கறை காட்டுவதாக விமர்சித்தார்.
கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மிசோரம் மாநிலத்தில் 1986ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் காங்கிரஸ் அமைதியை ஏற்படுத்தியதாக தெரிவித்த ராகுல் காந்தி, “இஸ்ரேலில் என்ன நடக்கிறது என்பதில் பிரதமரும் இந்திய அரசாங்கமும் மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஆனால் மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதில் சிறிதும் அக்கறை காட்டவில்லை,” என குற்றம் சாட்டினார். மணிப்பூரில் மக்கள் கொல்லப்படுவதாகவும், பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், குழந்தைகள் கொல்லப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒருவரையொருவர் மதிக்கும் இந்தியாவின் எண்ணம் சகிப்புத்தன்மை கொண்டது, பிற கருத்துக்கள், மதங்கள் மற்றும் மொழிகளிலிருந்து கற்றுக்கொள்கிறது. ஒட்டுமொத்தமாக தன்னை நேசிக்கிறது. ஆனால், அந்த இந்தியா பாஜகவின் தாக்குதலுக்கு உள்ளாகிறது என்று ராகுல் காந்தி சாடினார்.
உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!
மேலும், பாஜக பல்வேறு சமூகங்கள், மதங்கள் மற்றும் மொழிகளைத் தாக்குகிறார்கள். அவர்கள் நாட்டில் வெறுப்பையும் வன்முறையையும் பரப்புகிறார்கள். அவர்கள் ஆணவம், புரிதல் இல்லாமை ஆகியவற்றைப் பரப்புகிறார்கள், இது இந்தியாவின் கருத்துக்கு முற்றிலும் எதிரானது என்றும் ராகுல் காந்தி விமர்சித்தார்.
முன்னதாக, மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.