பிரதமர் மோடி மீது டெல்லி காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது
நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக திட்டமிட்டுள்ள நிலையில், முஸ்லிம்கள் குறித்து பேசி பிரதமர் மோடி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் இந்துக்களின் சொத்துகள் பறிக்கப்பட்டு, இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும். நமது வளங்களில் முஸ்லீம்களுக்கே முதல் உரிமை உள்ளது என காங்கிரஸ் கூறி வருகிறது. அதிக குழந்தைகள் உள்ளவர்களுக்கு நாட்டின் செல்வத்தை காங்கிரஸ் பகிர்ந்தளிக்கும் என்றார்.
பிரதமர் மோடியின் இந்த மத வெறுப்பு பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் பிரதமர் மோடியின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Loksabha election 2024 கேரளா, ஆந்திரா, கர்நாடகா தொழிலாளர்களுக்கு விடுப்பு - தமிழக அரசு உத்தரவு!
இந்த நிலையில், பிரதமர் மோடி மீது டெல்லி காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது. டெல்லி மந்திர் மார்க் காவல் நிலையத்தில் பிரதமர் மோடி மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அதில், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.