ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு குறித்து அவரது வேட்புமனுவில் இருந்து தெரிய வந்துள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. அந்த வகையில், மொத்தம் 175 சட்டமன்றத் தொகுதிகள், 25 மக்களவைத் தொகுதிகளை கொண்ட ஆந்திர மாநிலத்துக்கு ஒரே கட்டமாக மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
ஆந்திர மாநில சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏராளமானோர் தங்களது வேட்புமனுக்களை செய்து வருகின்றனர். அதில், வேட்பாளர்கள் குறிப்பிட்டுள்ள தங்களது சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், ஆந்திர மாநிலம் புலிவெந்துலா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கெஜன் மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு குறித்து வேட்புமனு சமர்ப்பின்போது, அவர் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.
அதன்படி, ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்து கடந்த 5 ஆண்டுகளில் 41 சதவீதம் அதிகரித்து ரூ.529 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டிற்கான வருமானம் ரூ.57.75 கோடி என்றும் அவர் தனது பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலின் போது, ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.375.20 கோடியாக இருந்தது.
ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி ரூ.36,000 அபேஸ்: பாஜக வேட்பாளர் பேரணியில் திருடர்கள் கைவரிசை!
ஜெகன் மோஜன் ரெட்டியின் மனைவி பாரதி ரெட்டிக்கு ரூ.176.30 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளன. பாரதியிடம் 6.4 கிலோ தங்கம் மற்றும் வைரம் உள்ளது, அவற்றின் மதிப்பு தற்போது ரூ.5.30 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெஜன் மோகன் ரெட்டி மற்றும் அவரது மனைவியின் பெரும்பாலான சொத்துக்கள் பாரதி சிமெண்ட்ஸ், சரஸ்வதி சிமெண்ட்ஸ், சந்தூர் பவர் போன்ற பல்வேறு நிறுவனங்களில் அவர்கள் வைத்திருக்கும் பங்குகளாக உள்ளன. கெஜன் மோகன் மீது 26 எஃப்ஐஆர்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அவர் முதல்வர் ஆவதற்கு முன்பு சிபிஐ, அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்டவை.
ஆந்திர மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க ஜெகன் மோகன் ரெட்டி முனைப்பு காட்டி வருகிறார். அண்டை மாநிலமான தெலங்கானாவில் ஆட்சியை பிடித்துள்ள காங்கிரஸ் ஆந்திர மாநிலம் மீதும் கவனம் செலுத்தி வருகிறது. ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளாவை அம்மாநில தலைவராக காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் களத்தில் உள்ளதால் அம்மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.